Header Ads



இலங்கையில் 2 ம் சுற்று கொரோனா தாக்கமொன்றை தடுக்க எம்மால் முடியும்

(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயின் இரண்டாம், மூன்றாம் சுற்று தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் வைரஸ் சமூக பரவலாக மாற்றம் பெறுவதை கட்டுப்படுத்த சகல சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக கூறும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான எந்தவித மருந்துகளையும் இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில் வைரஸ் தாக்கத்தை பூச்சியமாகக் முடியாது எனவும் அவர் கூறினார்.  

நாட்டின் ஊரடங்கு தளர்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக சுகாதார துறையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இரண்டு மாதகால கட்டுப்பாடுகளின் பின்னர் மீண்டும் நாட்டினை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்க்கப்பட்ட பகுதிகளில் மக்களின் செயற்பாடுகள் வழமையாக காணப்படுவதாக எமக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் நாட்டில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டாலும் கூட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் தொற்று குறித்த இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று தாக்கம் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. சீனாவிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது.

ஆகவே இலங்கையிலும் வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இரண்டாம் சுற்று தாக்கமொன்றை தடுக்க எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் முற்றாக நீங்கிவிட்டது என்றோ தாக்கம் பூச்சியமாகி விட்டதென்றோ எம்மால் கூறவே முடியாது.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு இன்னமும் மருந்துகளோ, நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் எதனையுமே இன்னமும் கண்டறியாத நேரத்தில் இவ்வாறான நோயினை தடுக்க முடியாது. எனவே மீண்டும் நோய் உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென்ற எச்சரிக்கையை எம்மால் விடுக்க முடியும். எனவே மக்கள்  தமது செயற்பாடுகள் மூலமாக நிலைமைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அதுமட்டு மல்லாது இலங்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவதில் பல சவால்கள் உள்ளன. விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள்.

அவ்வாறு இருக்கையில் விமான நிலையங்களில் பி.சி.ஆர் இயந்திரங்களை பொருத்துவதால் முழுமையாக சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யும் வேளைகளில் சாதாரண உடல் நிலையை வெளிப்படுத்தி பின்னர் சில நாட்களில் நோய் தாக்கத்தை காட்டும்.

ஆகவே சுற்றுலாத்துறையினரை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்திருக்க முடியாது. அது அவர்களின் பயணங்களை பாதிக்கும். எனவே இந்த பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்வி உள்ளது. எனவே இந்த விடயங்களில் மிகக் கவனமாக கையாள வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.