Header Ads



கான்கிரீட் கலவை இயந்திரத்தில் மறைந்து பயணித்த 18 தொழிலாளர்கள் - ஊரடங்கால் நேர்ந்த அவலம்


சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் மறைந்து பயணம் செய்த 18 பேர் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்துவரும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அவசர மருத்துவ தேவையின்றி எவரும் வெளியே பயணிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், பொதுப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.

பலர் சரக்கு வாகனங்களில் மறைந்தபடி பயணிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின்படி கட்டுமான தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வழியாக வந்த சிமெண்ட் கலவை இயந்திர வாகனத்தை மறித்த போலிஸார் அதை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாகனத்தின் சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் 18 பேர் மறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விசாரித்தனர். விசாரணையில் அந்த 18 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து தங்கள் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்ல முற்பட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சமூக இடைவெளியையும், ஊரடங்கையும் பின்பற்றாமல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட 18 பேர் மீதும், சிமெண்ட் கலவை வாகன ஓட்டுனர் மீதும் போலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.