Header Ads



வடக்கிற்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மேல்மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தனிமைப்படுத்தலின் பின்னரே அவர்கள் வீடுகளில் இருந்து வெ ளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாகாணங்களை விட்டு மாகாணம் செல்லமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் சில தளர்வு நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்குள் மக்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித தடைகளும் தற்போது இல்லை எனினும் மேல் மாகாணத்தில் இருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது மேல் மாகாணத்தில் அபாயகரமான பிரதேசங்கள் எனக்குறிப்பிடப்பட்ட இடங்களில் இருந்து வருபவர்களின் பெயர் விபரங்கள் எமக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

அவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்ற பெயர் விபரங்களில் உள்ளவர்கள் வடக்கு மாகாணத்திற்குள் வருகை தந்தவுடன் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்களின் பின்னர் தீவிர சோதனையின் பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் யாழ்ப்பாணத்தின் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வந்தவர்களில் அரியாலையைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனாத்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. 

இதனால் அவர்கள் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பின் அவர்களுக்கான பரிசோதனைகள் இடம்பெறும் என்றார்.

No comments

Powered by Blogger.