Header Ads



விசாகப்பட்டினத்தில் வாயுக் கசிவு: 13 போ பலி, 3 ஆயிரம் பேர் பாதிப்பு


ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள குறித்த இரசாயன தொழிற்சாலையில் இன்று (07) அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. 

இது, அங்கிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவியதால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீதிகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.

இவ்வாறு 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பலர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

சம்பவம் இடத்துக்கு விரைந்த ஜெகன் மோகன் ரெட்டி

ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தார் என்று ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், விசாகப்பட்டினம் வாயுக் கசிவு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவிப்பு

விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வாயுக் கசிவினால் உயிரிழந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.