Header Ads



11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது - இடைவெளி பேணுதல் மிகவும் அவசியமானது

சமூக இடைவெளி பேணுதல் மிகவும் அவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமெனவும் தெற்கு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்க நிலையிலிருந்து விடுவிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் இணைய தளத்தில் இந்த விடயங்களை பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று தற்பொழுது சமூகத்தில் சிறிதளவில் தொற்றி வருவதாகவும் கடந்த 2ம் திகதி 15 நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் அவர்கள் அனைவரும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு பேணியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத் தொற்று நிலைமை மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் இந்த நிலைமையை மேலும் வரையறுத்துக்கொள்ள முடியும் என டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் ஆயிரம் நோயாளிகளுக்கு என்றாலும் சிகிச்சை அளிப்பதற்கான ஆற்றல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.