Header Ads



கொரோனா தொடர்பில் ஊடகங்கள், மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம், Dr சத்தியமூர்த்தி கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தின் நிலை உணர்ந்து செய்திகளை பிரசுரிப்பது காலத்தின் கடமை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகபூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் எனவும் யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 பேரில் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த 18 பேருக்கும் கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் அச்சத்தினை ஊட்டும் வகையில் செயற்படக் கூடாது.

உளவியல் ரீதியில் மக்கள் நலிவுற்று உள்ள நிலையில் மக்களை சோர்வடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவது பெருத்தமாகாது.

எனவே இப்படியான செய்திகளை பிரசுரிக்கும் போது வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அல்லது என் ஊடாக இப்படியான செய்திகளை உறுதிப்படுத்தி பிரசுரிப்பது இன்றைய சூழலிற்கு பொருத்தமாகும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.