Header Ads



“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” - சமூக மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதிக்கு அறிக்கை


“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” என்ற பெயரில் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தல், நாட்டின் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பான தமது யோசனை அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக சங்கத்தின் ஊடக இணைப்பாளர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

“மூன்று கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டத்தை எப்படி நடத்தி செல்வது என்பது தொடர்பிலேயே பிரதானமாக நாங்கள் இங்கு ஆராய்ந்துள்ளோம். ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினால் எப்படி வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் வருவதற்கு மட்டுப்படுத்த முடியும்,? அனுமதி பத்திரம் வழங்க முடியுமா? அந்த காலப்பகுதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்தல் போன்றவை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அடுத்ததாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனியார் வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். பொது போக்குவரத்து வசதிகள் தளர்த்தப்படாது. இரண்டாவது சந்தர்ப்பத்திலேயே பொது போக்குவரத்தினை மட்டுப்படுத்தி தளர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதன் பின்னர் வர்த்தக நிலையங்கள், உணவு வழங்கும் இடங்களை முன்பு போலவே நடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தூர இடைவெளியில் சேவை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை சற்று தாமதமாகவே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவை ஆரம்பிக்கப்படாது.

அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 50 சதவீத திறனில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்கள் குறிப்பாக மேல் மாகாணத்தின் தேவைகளை அடையாளம் கண்டுள்ளோம் மற்றும் மேல் மாகாணத்திற்கு தனித்துவமான ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.