Header Ads



இனம் மற்றும் மதத்தை தாண்டி கண்ணுக்கு தெரியாத, எதிரியை தோற்கடிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்

அரசாங்கத்தினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர், ஏன் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ.ரோஹண நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

நாம் பதுங்கியிருந்தோ அல்லது கண்ணுக்கு தெரியும் எதிரியுடனோ போராடவில்லை, மாறாக கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே போராடுகின்றோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலை கையாளக்கூடிய அறிவும் அனுபவமும் உள்ள அதிகாரிகளின் பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இனம் மற்றும் மதத்தை தாண்டி பொதுவான எதிரியை தோற்கடிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுவது எமது கடமை.


அடையாளம் காணப்பட்ட பின்வரும் சிறப்பம்சங்கள் குறித்து தத்தமது நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதா எனவும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள படையினர்கள், அவர்கள் தனிப்பட்ட சமூக இடைவெளியை பேணியவாறு பயணிக்க கூடிய போக்குவரத்து வசதிகள் உள்ளதா?

அல்லது அதே வாகனத்தை மீண்டும் பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட்டவர் பயணித்திருந்தால் வாகனத்தில் செல்வோருக்கும் முகாமில் இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதா?

தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குடும்பத்தினருடன் வசித்தால் அவர்கள் சென்ற பின்னர் கூட்டு தனிமைப்படுத்தல் நிறுத்தப்படுமா? அவர்கள் சாதாரண சமூகத்துடன் இணைய முடியுமா?

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ளவது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயற்படாக அமையாதா?

பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரிகளுடன், கொரோனா சந்தேகநபர்களை மீண்டும் இணைப்பதால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படாதா?

வீட்டில் இருந்து பணிக்கு அழைக்கப்பட்ட ஒருவர் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தால், அவருடன் நெருங்கிப் பழகிய அனைவரும் அழைக்கப்படுவார்களா? அவ்வாறு நெருக்கிப் பழகியவர்களை யார் பராமரிப்பார்கள்?

தற்போதுள்ள வசதிகளுக்கு ஏற்ப கொண்டு செல்லப்படுவோர் எத்தனை நாட்களுக்கு பரிசோதனை செய்ய முடியும்?

தற்போது முதலாம் நிலை தொடர்புகளைப் பேணிய பலர் அடையாளம் காணப்பட்ட கிராமங்களை அண்மித்த திகதியில் சாதாரண சமூகத்திற்கு திறந்துவிடுவது பிரச்சினையாக இருக்காதா?

இந்த செயன்முறைகளில் முறையான தொழிநுட்ப நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.