April 22, 2020

ஒரு வேளை சோறு,, ஒருவேளை எமக்கெதிராக திரும்பினால்...?

கொவிட்-19,  கொரோனா என்று பேசி பேசி அலுத்துவிட்டது. என்னென்ன விடயங்கள் கொரோனாவிற்கு முன்னர் நாம் செய்ய வேண்டும் அல்லது முடிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அவை எல்லாமே எங்களுடன் சேர்ந்து முடங்கிப்போய் கிடக்கின்றன. 

அவசரமாகிப்போன உலகம் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் உணர்வு. மின்விசிறி போல் சுற்றி சுழன்று திரிந்த மானிடப் பிறவிகள் எல்லாம் மறு வாழ்வு கிடைத்தாற்போல் வீட்டினுள் தமது நெருக்கமான உறவுகளுடன் காலத்தை கழிக்கின்றனர். காலம் பொன்னானது என்று சொன்னதன் அருமை இப்பொழுதாவது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். தான் பெற்ற பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்றும் தன்னைப் பெற்ற பெற்றோருக்கு என்ன செய்ய மறந்தோம் என்றும் தன் உடல், உயிர், ஆவி எல்லாம் அர்ப்பணித்த தன் மனைவிக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்றும் இந்நிலையில் தான்  மானிடன் நன்றாகவே அறிகின்றான். ஒரு வகையில் கொரோனாவிக்கு நன்றி கூறத்தான் வேண்டும். 

இவை எல்லாவற்றையும் சிறப்பாய் செய்த மனிதன் தன் அண்டை வீட்டானைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டானா? அல்லது இயல்பாகவே ஒட்டிப் பிறந்த சுயநலம் இந்த நிலையிலும் அவன் மனதை ஆட்கொண்டுவிட்டதா? என்றெல்லாம் நாம் யோசிக்க வைக்கின்றன சில சம்பவங்கள். 

உன்மையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இன்னொரு மனிதனில் தங்கியே வாழ்கின்றான். உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் மனிதன் தொடங்கி உலகின் ஏழை என்ற பட்டியலில் உள்ள கடைசி மனிதன் வரைக்கும் இது பொதுவானதாகின்றது. அதே நேரம் ஒரு மனிதன் எனக்கு எவரின் உதவியும் தேவையில்லை என்றும் ஒருக்காலும் கூற முடியாது. அவ்வாறு அவன் கூறவும் மாட்டான். அதனையும் மீறி ஒரு மானிடன் கூறினால் கண்டிப்பாக அந்த மனிதனை மன நல மருத்துவமனையில் சேர்ப்பது சிறப்பு. 

இவ்வாறு உலகம், மற்றும் அதன் படைப்புக்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் ஒருவர் மற்றொருவர் மீது தங்கி வாழ்கின்ற நிலையில் நாம் நமது அருகில் வாழ்கின்ற ஏழைகளை நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா? 
நம் வீட்டில் அடுப்பெரியும் போது அங்கு அவன் வயிறு எரிவது எவ்வளவு கொடூரம்? ஒரு வேளை சோற்றுக்காய் அவன் பாடுபடும் நிலையில் விதவிதமாய் நாம் உண்பது ஒருவேளை நமக்கு எதிராக மறுமையில் திரும்பினால்??? 

"முன்கை நீண்டாத்தானே முழங்கை நீளும் " என்ற எம் முன்னோரின் பழமொழி எமக்கு அழகாய் ஒரு விடயத்தை சொல்லுகிறது. தான்,  கஷ்டம் அல்லது உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் ஒருவன்  தமக்கு மட்டும் இந்த சமூகமோ அல்லது யாரோ உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன் அந்த நிலை வேறொரு மனிதனுக்கு வரும் போது அவனுக்கு உதவி செய்ய தான் தயாராவதுமில்லை அல்லது அதைப்பற்றி யோசிப்பதுமில்லை என்பதையே கூறுகிறது. இது ஒருவகையான கீழ்த்தரமான செயல் என்பதுடன் மனிதன் கண்டிப்பாக இன்னொருவரின் தேவையுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கூறுகிறது. அதேபோல் "தான் விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பட்டும்" என்ற நபிகளாரின் வாக்கும் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களுக்கும் உதவ வேண்டும் என்பதனை கூறுகிறது. 

மகாபாரதத்தில் 18ம் நாள் அன்று கர்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் நேருக்கு நேராக போர் ஏற்படுகிறது. கர்ணன் பல்வேறு ஆயுதங்களை வைத்து  போர்புரிகிறான். அதுபோன்று அர்ச்சுணனும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு போர்புரிகின்றான். போர் உச்சநிலையை அடைகிறது.

பலரின் சாபங்களாலும், தெய்வத்தாலும் கைவிடப்பட்ட கர்ணனை அர்ச்சுணன்  வீழ்த்துகிறான். கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். அர்ச்சுணனால் முழுமையாகக் கர்ணனை அழிக்க முடியவில்லை. ஏனெனில் கர்ணன் செய்த தர்மம்  அவனது உயிரைப் பாதுகாக்கின்றது. தன்னால் கர்ணனை முழுமையாக அழிக்க முடியவில்லையே அதற்கு என்ன காரணம் என்று அர்ச்சுணன் கண்ணனிடம் வினவி உதவி வேண்டி நிற்கிறான். ஆனால் கண்ணனோ,

‘‘அர்ச்சுணா , கர்ணன் செய்த உதவியே அவனது உயிர் போகாமல் காத்து நிற்கின்றது. அதனால் தான் உன்னால் அவனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. உலகில் அவனைப் போன்று உதவியளிப்பதில் சிறந்தவர் யாருமில்லை. நான் சென்று அவனைக் காத்து நிற்கும் தர்மத்தினால் ஏற்பட்ட புண்ணியத்தைப் பெற்று வருகிறேன். அதன்பின் அவன் இறந்து விடுவான்’’

என்று கூறி அந்தணர் வடிவில் சென்று கர்ணனிடம் யாசித்து அவன் உதவி செய்ததால் ஏற்பட்ட புண்ணியத்தைப்  பெற்று அவனுக்கு வரமளித்து மீள்கிறான். கர்ணன் உயிர் துறக்கிறான். அதனால் ஒருவர் செய்த தர்மம் அவருக்கோ அல்லது அவரது சந்ததியினருக்கோ உறுதுணையாக அமையும். இதனை மனதில் இருத்திப் பிறர்க்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற கருத்தினை இங்கு நாம் தெளிவாக விளங்க முடிகிறது. 

‘‘தர்மம் தலைகாக்கும்’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கர்ணன் செய்த தர்மமே இறுதிவரைஅவனது உயிரைக் காத்து நின்றது அத்தர்மமே அவனது யெரைக் காலம் உள்ளளவும் மக்களின் மனதில் இடம்பெறச் செய்து கொண்டிருக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து நம்மாலான உதவிகளைப் பிறர்க்குச் செய்தல் வேண்டும் என்ற அறச் சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது.

கவிஞர் கண்ணதாசன் ஒரு இடத்தில், 

பொன்னாசை உறவை வெட்டும்
பொருளாசை பகையை மூட்டும்
பெண்ணாசை மிருக மாக்கும்
பேராசை உயிரை வாங்கும்;
மண்ணாசை போரில் மூழ்கும்
மனத்தினை உள்ளே வைத்த
என்னாசை யாலே தானே
இத்தனை ஆசை யெல்லாம்!’

என்று பாடியுள்ளார். இதை நாம் விரிவாக நோக்காவிடினும் அவர் கூற வரும் விடயத்தினை விளங்குவதே சிறப்பு. அதாவது அபரிமிதமான ஆசைகள் நமக்கு பிரயோசனமளிக்காது என்பதுடன், அவை இறுதியில் தமக்கு அதிகமதிகம் இழப்பையே தருகிறது என்று கூறுகிறார். 

தான் மட்டும் உண்ண வேண்டும், உடுக்க வேண்டும் தான் தான் என்று வாழும் ஒருவன் மற்ற மனிதருக்கு கொடுத்து அல்லது தர்மம் செய்யாது வாழும் நிலையில் அவன் இறுதியில்  பேராசை பிடித்து பைத்தியமாகி தானும் அனுபவிக்காது மற்றவனுக்கும் கொடுக்காது மாண்டு போகிறான். இதனை நாம் பேராசை பேரு நட்டம் என்றும் சொல்லலாம். 

மனிதன் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரைக்கும் ஏதோ ஒரு வகையில் தான் மற்றவர்களுக்கு உதவி செய்து தானும் அவர்களிடம் உதவி பெற வேண்டும் என்பதுதான் இறைவனும் இயற்கையும்  எமக்கு வகுத்த விதி. 

ஆனால் இன்று நாம் வாழும் இந்த அவசரமான உலகில் எம் அருகில் இருக்கும் ஏழைகளைப் பற்றி யோசிக்காது உலகின் எங்கோ ஒரு  மூலையில் இடம்பெறும் பசியினால் தற்கொலை செய்த குடும்பத்தை பற்றிய செய்திக்கு எம் அனுதாபத்தை தெரிவிக்கிறோம். எம் அருகில் எம் அடுத்த தெருவில் ஒரு குடும்பம் பசியினால் என்ன செய்வது என்று நிலை தடுமாறி இருக்க,  அதற்கு என்ன செய்வது என்பதை யோசிக்காமல் விட்டு விடுகின்றோம். 

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் யோசித்தால் ஒன்றே ஒன்று தான் விடையாக வருகிறது. எமக்கு எம்மைப் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் ஆழமாக ஆணிவேராக பதிந்து நிற்கிறது. நாம் அண்டை வீட்டானோடு நல்ல உறவைப் பேணவில்லை அல்லது அவனுடன் எம் பொழுதுகளை கழிக்க நாம் தயாராக இல்லை. எம் சமூகத்தைப் பற்றி சரியான அக்கறை இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் நான் நிம்மதியாக இருந்தால் சரி. மற்றவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது நாம் பார்த்துக்கொள்வோம் என்ற அலட்சியம். 

இவைகளை நாம் மாற்ற வேண்டும் என் பிள்ளைகள் உண்ணும் போது என் வீட்டருகில் உள்ள குழந்தைக்கு ஒன்றேனும் வாங்கி கொடுக்கும் மனோநிலை எமக்கு வர வேண்டும். நான் உண்ணும் போது என் அண்டை வீட்டானுக்கும் ஒருவேளை உணவு கொடுக்கும் மனம் வர வேண்டும். 

இதனை சரியாக யோசித்து ஏழைகளுக்கு  தானமாக ஏதாவது எம்மால் முடிந்ததை  வழங்கியதற்கு  இறைவன் நமக்கு இம்மையிலும் கூலி தந்து மறுமையிலும் கூலியாக சுவனத்தை தந்தால் !!!! எவ்வளவு அழகாக இருக்கிறதல்லவா?? 

நாய்க்கு தாகம் தீர்க்க நீரளித்த ஒரு விபச்சாரி பெண் சுவனம் சென்றதும், இறைவனோடு நெருக்கமாக இருந்த நல் அமல்களின் பக்கம் இருந்த ஒரு பெண் பூனை ஒன்றிற்கு  உணவளிக்காது அது இறப்பதற்கு காரணமாய் இருந்ததனால் நரகம் சென்றதும் நாம் இஸ்லாமிய வரலாற்றில் பார்க்கிறோம். 

இறைவன் அருள் புரிய வேண்டும். ஏழைகளின் பசி அறிந்து அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உதவும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும். உதவிகளை நீங்கள் செய்திடுங்கள் இறைவன் அதற்கு பகரமாய் நிறைய உதவிகள் செய்திடுவான். 

அஜ்வத் முஹம்மது ஷாஜஹான் 

0 கருத்துரைகள்:

Post a comment