Header Ads



கொரோனாவை மையப்படுத்தி, முஸ்லிம்களை குறிவைத்து இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுப்பு

இலங்கையில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து நாட்டை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதை நாம் அறிவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் திறமைமிக்க தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் அரசாங்கம் மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த அனர்த்தத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளமை நமது நாட்டின் தலைமைத்தவத்துக்கு கிடைத்துள்ள வெற்றியும் அங்கீகாரமுமாகும்.

அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை முகாமை செய்வதிலும் குறிப்பாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு சகல மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சென்றவடைவதற்குமான ஏற்பாடுகளை இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்றுதான் இலங்கையின் சுகாதாரத் துறையினரும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான பாதுகாப்புத் துறையினரும் இவ்விடயத்தில் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவது அவசியமாகும்.

தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவது உண்மையே. இருப்பினும் இவற்றைப் பொறுமையாகக் கடந்து செல்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவுறுத்தலுக்கிணங்க முஸ்லிம் பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அன்றி நிரந்தரமாக அல்ல. நிலைமைகள் சீரடைந்ததும் விரைவில் வழமை போன்று எமது மார்க்க கடமைகளை முன்னெடுக்க முடியும்.

அண்மைய நாட்களில் நாட்டிலுள்ள சில முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி கூட்டாக தொழுகை நடாத்தப்பட்டமை கவலைக்குரியதாகும். அதேபோன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியில் நடமாடித் திரிவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சட்டத்திற்கு மதிப்பளிக்காத நமது இவ்வாறான செயற்பாடுகள் இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும் என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த காலங்களில் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவூம் திட்டமிட்ட வகையில் இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று கொரோனா விவகாரத்தை மையப்படுத்தியும் முஸ்லிம்களைக் குறிவைத்து பிரசாரங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு நாமும் உடந்தையாக இருந்து விடக் கூடாது என வினயமாகக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கொரோனா வைரஸ் தாக்கம் என்பது ஒரு இனத்தையோ மதத்தையோ இலக்கு வைத்தது அல்ல. மாறாக ஒட்டுமொத்த மனிதர்களையுமே பாதிக்கக்கூடியது. அந்தவகையில் இந்த இக்கட்டான காலப்பகுதியில் அனைவரும் இன மத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக இந்த நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவோர் அவற்றை ஓர் இனத்துக்கோ மதத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தாது பிரதேசத்தில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அவ்வுதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

ஏ.ஜே.எம். முஸம்மில்
வடமேல் மாகாண ஆளுநர்

4 comments:

  1. do not worry about it. karama will turn on them. US is struggling now with all its weapons to protect its citizens,, now, some extremist Sinhalese try to catch fish in trouble water.. How long they will keep doing it till Karma struck them.. Let them have a taste of it then they will realise what their mistakes..

    ReplyDelete
  2. Majority who came form china and italy are not from muslims...
    These racist chennels have no agenda other than fueling racism against muslims.

    Same story in India also...

    Allah will answer them in a suitable manner insha Allah.

    ReplyDelete
  3. இனத்துவேசம் பேசும் தலைவர்களுடன்தான் நீங்கள் சேர்ந்துள்ளிர்கள்

    ReplyDelete

Powered by Blogger.