Header Ads



மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ‘கொரோனா’ பரிசோதனை - அபுதாபி அறிவிப்பு

அமீரகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படும் என அபுதாபி பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.

அமீரகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படும் என அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரிசோதனை 

அமீரகத்தில் வேகமாக பரவும் ‘கொரோனா’ வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபியில் ஏற்கனவே ‘டிரைவ் துரு’ என்ற அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் ‘கொரோனா’ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு பரிசோதனைக்காக வருபவர்கள் தங்களின் வாகனத்தில் இருந்தபடியே சளி திரவம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய லாரி ஒன்றில் நடமாடும் பரிசோதனை மையம் அபுதாபியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தொடங்கப்பட்டது.

இந்த நடமாடும் மையம் அபுதாபியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

அவ்வாறு பல்வேறு இடங்களில் ‘கொரோனா’ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டாலும், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக அங்கு வந்து பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்ய `தேசிய வீட்டு திட்டம்’ அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ குழுவினர் அமீரகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ தொடர்பாக பரிசோதனை செய்வார்கள். எனவே அனைவரும் இதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அமீரகத்தில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.