Header Ads



வியாபாரிகளே மக்களின் வயிற்றில், அடிக்க வேண்டாம் - அரசாங்கம் வலியுறுத்தல்

(ஆர்.யசி)

இனம், மதம், வர்க்க பாகுபாடு இல்லாது அனைவரையும் கொரோனா தாக்கி வருகின்றது. இந் நிலையில் வியாபாரிகள் மக்களின் வயிற்றில் அடிக்காது நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,  

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு வாங்கவேண்டியுள்ளதாக பல தரப்பில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சகல கிராமசேவகர் பிரிவிலும் முறைப்பாட்டு விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் மதம், இனம், வர்க்க பாகுபாடு இல்லாது கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களை தாக்கி வருகின்றது. இந்நிலையில் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை அடுத்து மக்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மொத்த வியாபாரிகள் சந்தைகளில் இருந்து பெரும் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம். அது மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும். 

வியாபாரிகள் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்களை விற்று மனிதாபிமான நிலையில் அனைவரும் செயற்படுங்கள் என்றே அரசாங்கம் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றது.

மேலும்  இப்போது வரையில் இலங்கையில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தரம் வாய்ந்ததாக  சர்வதேச நாடுகளே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ஆகவே அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தொடர்ந்தும் இதே வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதில் மக்களின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். 

1 comment:

  1. NEENGAL MAKKALIN PANATTHAI KOLLAI ADITTHU SEERTHA SOTTHAI PANATTHAI
    IPPA MAKKALUKKAHA KUDUKAWUM.MR BANDULA

    ReplyDelete

Powered by Blogger.