Header Ads



பிரியாணி சாப்பிட அனுமதி மறுத்ததால், மருத்துவமனை கண்ணாடியை நொறுக்கிய கொரோனா நோயாளி

பிரியாணி சாப்பிட அனுமதி மறுத்ததால் மருத்துவமனை கண்ணாடியை கொரோனா நோயாளி உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் என 117 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று போத்தனூரை சார்ந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட 28 வயது நபரின் மனைவி அவருக்காக பிரியாணி செய்து கொண்டு வந்துள்ளார். அதனை அவர் சாப்பிட வேண்டுமென்று செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரக்கூடிய சத்தான உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தீயணைப்பு கருவி மூலம் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மருத்துவமனையில் இருப்பிட மருத்துவர் குழந்தைவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணாடியை உடைத்த போத்தனூரை சேர்ந்தவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட இரண்டும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

1 comment:

Powered by Blogger.