Header Ads



எந்தச் சூழ்நிலையிலும் தான, தர்மங்களை நிறுத்தாதீர்கள்...

 - முப்தி யூஸுப் ஹனிபா -

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ஏற்பட்டிருக்கக்கூடிய அசாதாரண சூழ்நிலையை அனைவருக்கும் நலவுகள் நிறைந்த ஒரு சூழலாக மாற்றித்தர வேண்டும் என முதற்கண் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ்வின் பக்கம் எங்களுடைய நெருக்கத்தை கூட்டிக் கொள்வதற்கும் அவனுடன் உள்ள தொடர்பாடலை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கு முயற்சிப்போம்.

புனித ரமழான் எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வாழ்க்கையில் ரமழான் மாதத்தில் செய்து வந்த எல்லா வணக்க வழிபாடுகளையும் தான தர்மங்களையும் எந்த தங்கு தடையும் இல்லாமல் முகமலர்ச்சியுடன் அல்லாஹ்விடம் நன்மையை மட்டும் எதிர்பார்த்த நிலையில் தனிப்பட்ட முறையிலும் சரி கூட்டாகவும் சரி நாட்டு சட்டங்களையும் மதித்த நிலையில் முன்னெடுப்பதற்கு நாங்கள் திடகாத்திரம் கொள்வோம்.

குறிப்பாக பள்ளிவாசல்களில் கடமை புரியக்கூடிய இமாம்கள் சங்கையான ஊழியர்கள் பள்ளிவாசலிலிருந்து கிடைக்கக்கூடிய கொடுப்பனவுகளை மாத்திரம் நம்பி இருக்கக்கூடியவர்களை முன்னைய  காலங்களை விடவும் மிகவும் உன்னிப்பாக கவனித்து கண்ணியப்படுத்துவது எங்களுடைய கடமையாகும்.

அதேபோன்று பள்ளிவாசல்களில் இப்தாருடைய நிகழ்ச்சிகள் ஸஹருடைய நிகழ்ச்சிகள் என்று சொல்லி பல சகோதரர்கள் அவ்வப்போது பள்ளிவாசல்களுக்கு நன்கொடை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். கஞ்சி வழங்குதல்,இப்தார் ஏற்பாடுகளை செய்தல் போன்ற நற்காரியங்களை நாட்டுச் சட்டத்தை மதித்து நாங்கள் நிறுத்திக் கொண்டாலும் அதற்கு தானதர்மம் செய்தவர்கள் தயவு செய்து அதனை நிறுத்திக் கொள்ள வேண்டாம். அந்த அமல்களை நாங்கள் செய்து வருவோம். 

அந்தப் பணத்தைக் கொண்டு எங்களுடைய கிராமப்புறங்களில் அல்லது தாய் நாடுகளில் ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.நோன்பு பிடிப்பதற்கும் துறப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்யலாம்.ஏதோ ஒரு அடிப்படையில் நிறுவனமயப்படுத்தி இந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.

 இருக்கின்ற அசாதாரண சூழ்நிலையில் சில செயற்பாடுகள் தடைப்பட்டுப் போனாலும் நாட்டு சட்டத்தை மதித்த நிலையில் தானதர்மங்கள் வழங்குவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். அதனை தொடர்ந்து கொடுத்து வாருங்கள். உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் தர்மங்களைத் தொடர்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.அல்லா் அவற்றைப் பல மடங்காக்கி தந்து கொண்டே இருப்பான். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் துணை புரிவானாக! எங்களுடைய தர்மங்களை ஏற்றுக் கொண்டு அருள்புரிவானாக!

No comments

Powered by Blogger.