Header Ads



கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன. 

அந்த வகையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன. வைரஸ் தாக்கிய பின்னர் இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு வெளியில் தெரிய ஆரம்பிக்கும் என்று சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிடிசி கண்டுபிடித்த புதிய அறிகுறிகள்:

1. காரணமின்றி உடல் குளிர்வது போன்று உணர்தல்
2. காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல்
3. கடுமையான வேலை செய்யாத நிலையிலும் தசை வலி ஏற்படுதல்
4. திடீரென தோன்றும் தலைவலி
5. சுவை மற்றும் வாசனை உணர்வு குறைந்துபோதல்.

இந்த அறிகுறிகள் அனைத்தும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. உலக சுகாதார அமைப்பானது, “காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவை கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஆகும்,” எனத் தெரிவிக்கிறது. 

பொதுவாக கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. 

அதே நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த அறிகுறிகள் மட்டும்தான் வரும் என்று சொல்வதற்கில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி தெளிவு பெற வேண்டும் என்றும் சிடிசி விளக்கியுள்ளது. 

2 comments:

  1. இவை அனைத்தும் ஏற்கனவே வெளியாகிய தகவல்களே அன்றி புதிதாக ஒன்றுமில்லை. புதிது புதிதாக சில நாடுகள் வெளியிடும் தகவல்களை வைத்து அதன் மதிப்பைக் குறைத்து அதே கருத்தை வேறு விதமாக வெளியிடுவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள். இதுவரைக்கும் உயிரிழப்பு விகிதத்தையாவது குறைக்க முடியமால் திண்டாடிக் கொண்டிருக்கையில் அதைக் கண்டு பிடித்தோம் இதைக் கண்டு பிடித்தோம் என்று காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நிவ்யோர்க் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் உள்ள நோயாளிகள் கொலை செய்யப்படுவதாக தாதியர் ஒருவர் வழங்கிய செவ்வி அந்த நாட்டின் வைத்தியத் துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

    ReplyDelete
  2. இவை கொரோனாவுக்கு மட்டுமல்ல சாதாரண நேரங்களிலும் தென்படக்கூடியவையே?

    ReplyDelete

Powered by Blogger.