Header Ads



சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு, தானம் கொடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள்


கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுக்காவில் முகம்மதுநகரை சேர்ந்த சகோதரர்கள் தஜமுல் பாஷா (40) மற்றும் முஸம்மில் பாஷா (32) . தஜம்முல் தனது எட்டாவது வயதில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்டார். யாருமில்லாத காரணத்தால் தாய்வழி பாட்டியின் ஆதரவினை தேடி தம்பியை தூக்கிக்கொண்டு வந்து கோலார் நகரில் தஞ்சமடைந்தார்.

அங்கு குடிசையில் வசித்த பாட்டியும் சிலநாட்களில் இறந்துவிடவே இருவரும் ஆறாவது நான்காவது படித்த கையோடு பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டு பஜார் ஒன்றில் எடுபிடி வேலைக்கு இருந்தனர். அங்கிருந்த ஒரு பெரிய மனிதர் இவர்களுக்கு கவுரிபேட்டை மஸ்ஜிது அருகே ஒரு சிறிய வீட்டை கொடுத்து தங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.

25 லட்சம் மதிப்பிலான சொந்த நிலத்தை விற்றனர்:

அப்படியே பல வேலைகளும் செய்து சுயமாக வாழ்வில் முன்னேறிவிட்ட சகோதரர்கள் இருவரும் வீடுகள் நிலங்களை புரோக்கரேஜில் வாங்கியும் விற்றும் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணன் தஜமுல் பாஷாவுக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர், தம்பி முஸம்மிலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் சம்பாதித்த பணத்தில் சிறிது நிலம் வாங்கி போட்டிருந்தனர், பணம் சேர்த்து அதில் வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்..

ஆனால் கொரனா பீதி காரணமாக போடப்பட்ட பிறகு அவர்கள் வாழும் பகுதி மக்கள் பசியால் அவதியுற்றதை கண்டு சகிக்கமுடியாமல் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். மீண்டும் லாக்டவுன் நீடிக்கப்பட்ட பிறகு மேலும் அவர்கள் குழந்தை குட்டிகளோடு பட்டினியில் வாடியதை கண்ட அவர்கள், மக்களின் பசியை போக்க திட்டமிட்டு, அவர்களது சொந்த நிலமான 1,400 சதுர அடி வீட்டுமனையை வியாபாரி ஒருவரிடம் 25 லட்சத்திற்கு விற்றுவிட்டனர். இவர்களது நல்லெண்ணத்தை புரிந்துகொண்ட அந்த நிலம் வாங்கும் நபரும் பெருந்தன்மையாக நல்ல விலைக்கு தமது நிலத்தை எடுத்துக்கொண்டதாக தஜம்முல் கூறுகிறார்.

பகுதிவாழ் இளைஞர்கள் ஒரு 20 பேரை சேர்த்துக்கொண்டு முதல் காரியமாக டன் கணக்கில் பலசரக்குகளை வாங்கி, பிறகு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ மாவு, 2 கிலோ கோதுமை, 1 கிலோ சீனி , எண்ணெய் மற்றும் சானடைசர் மாஸ்க் உட்பட அனைத்துவித மசாராப்பொருட்களும் அடங்கிய பொதிகளை அனைவருக்கும் தானம் செய்தனர். மேலும் வேறு பகுதி மக்களுக்கு கொண்டு கொடுக்கவும் போலீசாரிடம் அனுமதிச்சீட்டு வாங்கி, பைக்கில் கொண்டு போய் விநியோகித்தனர்.

முன்னதாக ஹைவேயில் நடைபாதையாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு சென்ற திறக்கூலி தொழிலாளர்களுக்கும் சமைத்த உணவு விநியோகித்தனர். தற்போது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் சமைத்த உணவினை பகிர்ந்து வருகின்றனர்.

பசியின் கொடுமையை அறிந்தவர்கள்:

பசியின் கொடுமையை இளவயதிலே அறிந்த காரணத்தால் குழந்தைகள் பசியால் எப்படி துடிப்பார்கள் என தமக்கு தெரியும் என்றும், மேலும் பல மனிதர்கள் எங்களுக்கு பசிக்கிறது என்று கூறி பிறரிடம் கையேந்தி உண்ண கூச்சப்படுபவர்களாக இருப்பார்கள் என்பதையும் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும். பசி என்பது இந்து – முஸ்லிம் பார்த்து வராது…மாறாக பசி என்று வந்துவிட்டால் நம் பெருமைகள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்றும் கூறுகிறர் தஜம்முல் பாஷா.

பாஷா சகோதரர்கள் தற்போது வரை 2,800 குடும்பங்களுக்கு அதாவது 12,000 பேருக்கு உணவுப்பொதிகளை விநியோகித்துள்ளனர். தற்போது சுமார் 2,000 பேருக்கு சமைத்து உணவு தயாரித்து கொடுத்துள்ளதாகவும், லாக்டவுன் மேலும் நீடிக்கும்பட்சத்தில் தமது அருகாமை தோழர்களையும் தானம் செய்யும் மனம் படைத்தவர்களையும் இணைத்து இச்சேவையை நீடிக்க இருப்பதாக கூறுகின்றனர் இந்த தயாள குணம்படைத்த சகோதரர்கள் இருவர்.

கோலாரின் இரு தங்கங்களுக்கு வாழ்த்துகள் குவிகிறது.

2 comments:

  1. யாஅல்லாஹ் இந்த சகோதரர்களின் எண்ணத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் செயலை அங்கீகரித்து, இந்த பரக்கத்தான மாதத்தில் உன்னுடைய எல்லையற்ற அருள் கடாட்சத்தை அள்ளிவழங்குவாயாக. அவர்களுடைய துய்மையான பணியை இறுதிவரை தொடர்வதற்கான வாய்ப்புகளையும் வழிவகைகளையும் இலகுவாக்கிக் கொடுப்பாயாக. எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. ஆமீன்.

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.