April 04, 2020

அறியாமைக்கும் அரசியலுக்கும் இடையில் அடிபடும், முஸ்லிம்களின் இறுதிப்பயண அடிப்படை உரிமை

- சட்டத்தரணி சறூக் -

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவால் இறப்பவர்களின் உடலை எரிக்க ்அல்லது புதைக்க பரிந்துரைத்துள்ளமையும் அதனை உலகிலுள்ள 190க்கு மேற்பட்ட நாடுகள் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் நாம் அறிவோம்.

மேற்கூறப்பட்ட பரிந்துரையின் படி இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொற்றுநோய்ப்பிரிவின் அனுசரனையுடன் இலங்கை மருத்துவக்கல்லூரியினால் Covid 19 நோயாளிகளை கையாளுவதற்கான தற்காலிக மருத்துவ நடைமுறை வழிகாட்டி 27/03/2020 வெளியிடப்பட்டது.

இந்த வழிகாட்டிக்கான பரிந்துரை உலக சுகாதார அமைப்பினால் (WHO)வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையிலிருந்து பெறப்பட்டு இலங்கையின் IDH, இலங்கை தேசியவைத்தியசாலை, கண்டி, இரத்னபுர தொற்றுநோய்பிரிவு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் டீ சொய்சா வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் 16 அனுபவமுள்ள வைத்திய நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கூறப்பட்ட சர்வதேச பரிந்துரைக்கமைய செயற்படும் இலங்கை அரச இயந்திரம் கொரோனாவால் மரணிப்பவர்களை புதைப்பதில் மாத்திரம் ஏன்

உள்நாட்டு நிலவரங்களை காரணம் சொல்லி இரு முஸ்லிம் சடலங்களை தகனம் செய்தது?.

எந்தவொரு தொற்று நோயினால் இறக்கும் நோயாளியின் சடலத்திலிருக்கும் தொற்று நோய்க்கிருமைகளும் தனது வீரியத்தை இழந்து விடும் என்பது வைத்தியதுறையின் ஏகோபித்த முடிவு.

நீர் கொழும்பில் மரணமான முஸ்லிமின் உடலை அவசரமாக தகனம் செய்வதில் உள்ளூராட்சி அரசியல்வாதியின் முஸ்லிம்கள் மீதுள்ள பலிதீர்த்தல்,குறித்த முஸ்லிம் உடனடியாக வந்து அரச வைத்திய சாலையில் admit ஆகாமை, தனிமைப்படுத்தப்பட்ட(Qurantine )குடும்ப உறுப்பினர்கள் உடலை பார்க்கவர தாமதித்தமை, நிலநீர்மட்டம் மற்றும் ஜனாசாவை பார்ப்பதற்கு பயந்து உடலை மறைப்பதற்கான (சந்திரமண்டலத்தில் இறங்குவதுபோல) ஆடைகளைத் தேடுவதில் சமூக சேவையிலீடுபடுபவர்கள்(?)காலத்தை வீணடித்தமை என பல விடயங்களை உடல் தகனம் அவசரமாக செய்தமைக்குக் காரணங்களாக அமைந்தன.

இரண்டாவது முஸ்லிம் சகோதரனின் உடல் தகனம் செய்தமைக்கான காரணம் எமது அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகளும் எமது சமூகம் மூழைக்கு வேலை கொடுக்காது முண்ணானுக்கு வேலை கொடுத்து பொலிசாருக்கு அறிவிக்காமல் பழைய அடக்கஷ்தலங்களுக்கு மேலால் பயணம் செய்த வெக்கோ இயந்திரத்தால் கொழும்பு மையவாடிகளில் அடக்கத்திற்கான குழிகளைத்தோண்டி மையவாடியின் சூழலிலுள்ள பெரும்பான்மை மக்களை உசுப்பேற்றியமை.

சர்வகட்சி கூட்டத்தில் எமது சமூக அரசியல்வாதிகள் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது சம்பந்தமாக நமது சமூகத்திற்காக பேசிய போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ “ நாட்டின் இக்கட்டான சூழலில் எமது சமூகத்திலும் இப்படியான பிரச்சினையிருக்கிறது எனவே இது சம்பந்தமான அறிவைக்கொண்ட மருத்துவ நிபுணர்களின் தீர்மானமே இறுதியானது” என பந்தை சுகாதார பிரிவினர் பக்கம் அடித்து விட்டார்.

சுகாதார பிரிவினரின் வாதங்கள்.
1.சடலங்களை எவ்வளவுக்கெவ்வளவு அவசரமாக அழிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டுமென்பது அதாவது வைத்தியசாலைக்குப்பக்கத்திலிருக்கும் சுடலையில் தகனம் செய்வது இலகுவானது என்பது.
2. மரணித்தால் தொற்றுக்கிருமிகளும் வலு இழந்துவிடும் என்பது உண்மை ஆனால் புதிய Corona தொற்று வைரசைப்பற்றிய அறிவு போதாமை காரணமாக புதைப்பதால் நிலத்தினூடாக பரவலாம் எனும் பய எண்ணம்.
3.அடக்கம் செய்யும் போது அதிகமானவர்கள் சடலத்தை கையாள அதிக வாய்ப்பிருக்கின்றமை. அதனால் இலகுவில் அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்பது.
இனவாதம், பிடிவாதம், பலிதீர்த்தல் மற்றும் அரசியல் என்பவற்றுக்குள் புதைப்பதா? எரிப்பதா? என்ற விடயம் தற்போது பேசு பொருளாக இருக்கின்ற போது. சட்டம் இது தொடர்பாக என்ன சொல்கிறது என பார்ப்போம்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை எவரும் பின்பற்றாவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கிடமுடியாது.

ஆனால் Corona virus நோயை இலங்கையின் quarantines and prevention of Disease ordinance சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் அண்மையில் உள்வாங்கியிருப்பதால் இச்சட்டத்தின் அடிப்படையில் தான் இலங்கையில் கொரோனா சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

Quarantines and prevention of Disease ordinance சட்டத்தின் பிரிவு 3(1)(i) படி சுகாதார அமைச்சர் நோயினால் இறக்கும் நபரை எரிப்பதற்கான அல்லது புதைப்பதற்கான விதத்தை (mode) பரிந்துரைக்கும்ஒழுங்குவிதிகளையாக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

3.(1)(i).For prescribing the mode of burial or cremation of any person dying of disease.
எவ்வாறு புதைக்கலாம் அல்லது எரிக்கலாம் எனும் செயல்முறைகளை மாத்திரமே ஒழுங்குவிதிகளாக சுகாதார அமைச்சர் ஆக்கலாம்.

இங்கே சடலத்தை எரிக்கலாமா? அல்லது புதைக்கலாமா? என அமைச்சர் முடிவெடுக்கமுடியாது.

முஸ்லிம்களின் உடல்கள் அடக்கப்படவேண்டும் என்பது எமது அடிப்படையுரிமையாகும்.

இலங்கை வாழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தின் எல்லா உறுப்புக்களாலும் (நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை) போற்றப்படவும் பேணப்படவும் ஏற்றமளிக்கப்படவும் வேண்டும் மேலும் இதில் கூறப்பட்ட மட்டுப்பாடுகளைத்தவிர அவை மட்டுப்படுத்தப்படுதலோ மறுக்கப்படுதலோ ஆகாது என எமது அரசியலமைப்பின் உறுப்புரை 4(D) கூறுகின்றது.

4(D). The Fundamental rights which are by the Constitution declared and recognized shall be respected,secured and advanced by all the organs of government,and shall not be abridged, restricted or denied ,save in the manner and to the extent hereinafter provided.
ஆகவே சட்டங்கள் இவ்வளவு தெளிவாகயிருப்பதால் நிறைவேற்றுத்துறையான சுகாதார அமைச்சு, எமது சகோதரர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் எமது அடிப்படை உரிமையை மீறாது என எதிர்காலத்தில் எதிர்பார்ப்போம்.

Corona ஜனாசாவை பாரமெடுத்து உடனடியாக அடக்குவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் இறைவனை மாத்திரம் அஞ்சுகிற துடிப்புள்ள இளைஞர்கள் குழுக்களை உருவாக்குவோம். இறக்கும் குடும்பத்தினரின் அதிகாரமளிக்கும் கடிதத்தை (letter of Authority) பெற்று அவர்கள் சார்பாக நல்லடக்கம் தொடர்பாக இயங்குவதற்கு வாய்ப்பளிப்போம்.

மரணித்தவரின் உடலிலுள்ள எஞ்சிய corona கிருமிகள் body bag மற்றும் சீல் செய்யப்பட்ட பெட்டியைத்தாண்டிவெளியே வராது என்ற உயிரியல் சம்பந்தப்பட்ட உண்மையை அடம்பிடிக்கும் சம்மந்தப்பட்டவர்களிடம் ஆதாரங்களுடன் ஊறுவதற்கு எமது முஸ்லிம் வைத்தியத்துறை சகோதரர்கள் முன்வரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும்  அறியாமைக்கும் அரசியலுக்குமிடையில் அடிபடும் விடயமாகவே முஸ்லிம்களின் அடிப்படையுரிமைகள் காணப்படுகின்றன.

2 கருத்துரைகள்:

தெளிவான பதிவு !

தெளிவான விளக்கம் உஙகள் பணி தொடர வாழ்த்துக்கள்

Post a comment