Header Ads



ஈரானின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் தொற்று

ஈரான் நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அங்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 

குறிப்பாக அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். மூத்த அரசு ஊழியர்கள் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி துணை அதிபர், சுகாதாரத்துறை மந்திரி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஈரான் பாராளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வரும் 62 வயதான அலி லரிஜானி அதிபர் ஹசன் ருஹானி மற்றும் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.