Header Ads



இலங்கையில் செந்நிற வானம், ஆச்சரியமடைந்த மக்கள் - காரணம் என்ன..?


இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர்.

தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல் முடங்கியிருந்த பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது வெளியில் சென்ற நிலையில், இயற்கையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.வீதியோரங்களில் இதுவரை பூக்காத மரங்கள் பூத்து குலுங்குவதை அவதானிக்க முடிகின்றது. புற்கள் அழகாக வளர்ந்து தூய்மையாக இருப்பதை காண முடிகின்றது.

வீதிகள் தூசியின்றி தூய்மையாக இருப்பதை பார்க்க முடிகின்றது.தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பல இயற்கை சுவாரஸ்யங்களை தற்போது காண முடிகின்றது என பலரும் கூறி வருவதை கேட்க முடிகின்றது. இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக காற்று மாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதென இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.நாட்டில் கடந்த 20 வருட கால வரலாற்றில் காற்று மாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக கருத முடிகின்றது என அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இவ்வாறான நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக வானத்தை செந்நிறத்தில் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செந்நிறத்திலான தெளிவான வானத்தை கண்டிராத பலர், ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்ததை போன்று தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக இலங்கையை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மாலை நேரங்களிலேயே வானின் நிறம் செந்நிறமாக இருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.இந்த நிலையில், என்றும் இல்லாதவாறு வானம் ஏன் செந்நிறத்தில் தோற்றம் அளிக்கின்றது என பிபிசி தமிழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறியை தொடர்புக் கொண்டு வினவியது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் ஒரு மாதத்தையும் கடந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த காற்று மாசு வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், காற்று மாசு வீதம் குறைவடைந்துள்ளமையினால் தொலை வானம் தற்போது மிகவும் தெளிவாக தெரிகின்றது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

மேகக்கூட்டங்களில் படியும் காற்று மாசுகள் தற்போது படியாமையினாலேயே மேகங்கள் கூட்டம் கூட்டமாக தெளிவாக தென்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வளிமண்டலத்தின் தூய்மையையே தொலை வானம் தற்போது வெளிப்படுத்துகின்றது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பல பகுதிகளில் மாலை நேரத்தில் தொலை வானம் செந்நிறத்தில், தூய்மையாக காட்சியளிப்பதை காணும் மக்கள் இயற்கை கண்டு வியந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. BBC

No comments

Powered by Blogger.