Header Ads



தேர்தலை நடத்தினால் சட்ட, நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை


(நா.தனுஜா)

தற்போதைய நெருக்கடி நிலையில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானமெடுக்கும் பட்சத்தில், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய சட்டநடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எச்சரித்திருக்கிறது.

பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு வலியுறுத்தி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகேயினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இன்றைய தினம் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது நியாயமற்றது என்றே நாம் கருதுகின்றோம். நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் பழைய நிலைக்குத் திரும்பாத சூழ்நிலையில் தேர்தல் நடாத்தப்பட்டால், அது வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு அநீதி இழைப்பதாகவே அமையும்.

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் தேர்தலை நடாத்த வேண்டாமென உங்களிடம் கேட்டுக்கொள்வதுடன், அரசியலமைப்பின் 93 ஆவது பிரிவின் மீது அவதானம் செலுத்துமாறும் கோருகின்றோம்.

இவற்றுக்கு மாறாக தற்போது தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானமெடுக்கும் பட்சத்தில்,மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியேற்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

No comments

Powered by Blogger.