Header Ads



இனவாத அச்சாணியில் சுழன்றவர்கள், கழன்று போவதற்கு காரணம் என்ன..?

-Azeez Nizardeen-

தெரண சத்துரவுக்கும், அரச மருத்துவர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடு முற்றியிருக்கிறது.

ஒரே இனவாத அரசியல் அச்சாணியில் சுழன்றவர்கள் இப்படி கழன்று போவதற்கு காரணம் என்ன?

இனவாத அரசியல் ஒற்றைப் புள்ளியை சுற்றி வந்த இந்த சக்திகளுக்குள்ளேயே முரண்பாடுகளும் முறுகல்களும் இப்போது பற்றி வருகிறது.

தெரண ஊடகத்திற்கு என்று ஓர் அரசியல் எஜன்டா இருக்கிறது. அந்த எஜன்டாவிவிற்கு ஆதரவாக இருப்பவர்கள் ஸீரோவாக இருந்தாலும் அவர்களை ஹீரோவாக உயர்த்திக் காட்டும் அசிங்கமான நெறிமுறையும், ஊடக அதர்மமும் அதற்கு இருக்கிறது.

தெரணவின் அரசியல் எஜன்டாவிற்கு பாதகம் வரும் போது அவர்கள் யாராக இருந்தாலும் பாய்ந்து தாக்கப்படுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் அரச மருத்துவர் சங்கத்தின் மீதான தெரண சத்துரவின் அண்மைய தாக்குதல்.

தெரண ஊடகம் அரசாங்க மருத்துவர் சங்கத்தோடு முரண்படுவதற்கும், முட்டிக்கொள்வதற்கும் காரணம் இதுதான்.

அரச மருத்துவர் சங்கம் கடந்த 20ம் திகதி ஓர் ஊடக சந்திப்பில் நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், எவ்வளவு எடுத்துக் கூறியும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அதிகாரிகள் கவனத்திற் கொள்கிறார்கள் இல்லையென்றும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

இந்த குற்றச்சாட்டே, இனவாத அச்சாணியில் மச்சினன்களாக சுற்றிய இரண்டு தரப்பினருக்கும் இடையில் முறுகலை முற்ற வைத்தும், பற்ற வைத்தும் இருக்கிறது.

அடுத்த நாள் 21ம் திகதி காலை தெரண அருண நிகழ்ச்சியில் இந்த குற்றச்சாட்டுக்கு தனக்கே உரிய நக்கல் நையாண்டி பாணியில் சத்துர அல்விஸ் மருத்துவர் சங்கத்திற்கு பதிலளித்து உள்ளார்.
அந்த பதிலில்,

மருந்து பொருட்கள் தட்டுப்பாடு நிலவுதாக அரச மருத்துவர் சங்கம் அடிக்கடி சுட்டிக்காட்டுவதன் பின்னணியில் மருந்து வியாபாரிகளான “மருத்துவ மாபியா”க்களிடமிருந்து மருத்துவர் சங்கத்திற்கும் ஏதாவது ஆதாயங்கள் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டைக் கேட்டு மருத்துவர் சங்க அங்கத்தவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். ஆடிப்போய் உள்ளனர்.

சத்துர அல்விஸின் குற்றச்சாட்டை தாங்கிக் கொள்ள முடியாமல் அரச மருத்துவர் சங்கம் சத்துர அல்விஸின் குறித்த நடவடிக்கை தொடர்பாக தெரண ஊடகத்தின் தலைவரும், இன்றைய ஊடக அதர்மத்தின் அடையாளமாகவும், ஜாம்பவானுமாக ஜொலிக்கின்ற திலித் ஜயவீரவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கடந்த (நல்லாட்சி?) அரசாங்க காலத்தில் இதே மாதிரியிலான குற்றச்சாட்டுகளை தமது அமைப்பு வெளியிட்டபோது அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி அதனை தெரண ஊடகம் பிரசாரம் செய்ததாகவும் மருத்துவர் சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமான விடயமாகும்.

தலைவலியின் வேதனை தனக்கு வந்தால் தான் தொியும் என்பார்கள். இந்த வைத்தியர் சங்கத்திற்கு அந்த சோதனை இன்று வந்திருக்கிறது.

தெரண ஊடகம் ஒவ்வொரு நாளும் காற்றில் கலந்து விடும் விஷக் கருத்துகளுக்கும், விதைக்கும் வெறுப்புணர்வுகளுக்கும் வரையறையே இல்லை.

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி அதற்கிடையில் குறுகிய அரசியல் செய்யும் அதன் அநாகரீகமான, அசிங்கமான விளையாட்டில் இந்த வைத்தியர் சங்கமும் வீரப்பதக்கங்களை அவ்வப்போது வென்றிருக்கிறது.

பொய்யும், துவேசமும், சேறு பூசலும், வெறுப்புப் பேச்சும் எத்தனை மனித உள்ளங்களுக்கு வலியையும், மன அழுத்தங்களையும் வழங்கியிருக்கிறது.

இன்று அந்த வலியை எங்கள் வைத்தியர் சங்கத்திற்கே தெரண ஊடகம் வழங்கிருக்கிறது.


4 comments:

  1. எது எப்படியோ பொய்யின் சுயரூபம் நிச்சயம் வெளியில் வரும் மக்கள் புரிந்து கொள்ளும் அலவிற்கு சந்தர்ப்பம் உருவானால் சாலச் சிறந்தது

    ReplyDelete
  2. அல்லாஹ் மிகப் பெரியவன்

    ReplyDelete
  3. "The cobra was attacked by a viper"
    Anyhow both are deadly snakes.

    ReplyDelete
  4. கொரோனா வைரஸ் மிகச்சிறயது!

    ReplyDelete

Powered by Blogger.