Header Ads



தனது காரையே வீடாக மாற்றி, 5 நாள்கள் தங்கியிருந்த மருத்துவர்


தனது வீட்டு வாசலில் சாலையோரமாக தனது காரை நிறுத்திவிட்டு, அதிலேயே சுமார் 5 நாட்களுக்கும் தங்கியிருந்தார் அரசு மருத்துவர். அவரது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டு அவர் இப்படி செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் பணி நேரம் போக மிச்ச நேரத்தை காரிலேயே தங்கியிருந்து, செல்லிடப்பேசி மூலமாக குடும்பத்தாருடன் பேசி, நேரம் கிடைத்தால் காரிலேயே புத்தகம் படித்து தனது நேரத்தை செலவழித்துள்ளார் இந்த அரசு மருதுவர் சச்சின் நாயக்.

அவர் பணியாற்றி வந்த மருத்துவமனை தரப்பில், மருத்துவப் பணியாளர்கள் விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது கார் வீட்டில் இருந்து விடுதிக்குச் சென்றுள்ளார்.

போபாலில் உள்ள ஜே.பி. மருத்துவமனையில் பணியாற்றி வரும் சச்சின், வீட்டுக்கு வந்தால், தனது மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், வீட்டுக்குச் செல்லாமல் காரிலேயே தங்கியிருந்தார். 

ஒரு நாளைக்கு சுமார் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்திக்கிறோம், அவர்களிடம் இருந்து ரத்த மற்றும் சளி மாதிரிகளையும் சேகரிக்கிறோம், அதன் மூலம் தொற்றுப் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனக்கு வேறு வழியில்லை, அதனால்தான் காரிலேயே தங்கியிருந்தேன் என்கிறார் மருத்துவர் சச்சின்.

தனது காரின் பின் இருக்கையை மடித்துப் போட்டுவிட்டு அதன் மீது போர்வை போட்டு அங்கேயே படுத்துக் கொண்டவர், சோப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் காரிலேயே வைத்துக் கொண்டு, பணிக்குச் செல்வதும், பணி முடிந்ததும் வீட்டுக்கு வந்து, காரிலேயே தங்குவதுமாக 5 நாட்களைக் கடத்தியிருக்கிறார்.

மருத்துவப் பணியாளராக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அதே சமயம், எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் மருத்துவர் சச்சின் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.