Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் 59,419 பேர் நாட்டிற்கு வர பதிவு

(ஆர்.யசி)

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சர்வதேச நாடுகளில் இருக்கும் இலங்கையர்களில் 59 ஆயிரத்து 419 பேர் இலங்கைக்கு மீண்டும் வருவதற்காக தம்மை பதிவு செய்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு கூறுகின்றது. 

அனைவரையும் உடனடியாக நாட்டுக்கு வரவழைக்க முடியாத நிலைமை இருக்கின்றதாகவும் எனினும் தமக்கு தேவையான உதவிகளை வழங்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக காணொளிகள் மூலமும், அறிக்கைகள் மூலமும் தெரியப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடந்த வாரங்களில் வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்திருந்ததது. 

இந்நிலையில் தற்போது வரையில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் ருவந்தி டெல்பிட்டியவிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மற்றும், பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கவனம் செலுத்தி வருகின்றது. உலகில் சகல நாடுகளிலும் உள்ள இலங்கையர்களில் மொத்தமாக 59 ஆயிரத்து 419 பேர் இப்போது வரையில் தம்மை பதிவு  செய்து அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம்  21 ஆயிரத்து 575 பேர் இவ்வாறு தம்மை பதிவு செய்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் ஒரே நேரத்தில் அனைவரையும் இலங்கைக்கு வரவழைக்க முடியாதுள்ளது. எனினும்  அவர்கள் குறித்த நாடுகளில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர் என்றால், அல்லது உணவு, மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாயின் உடானடியாக அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுக்க சகல நாடுகளில் தூதரகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சு தொடர்ச்சியாக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த வண்ணமே உள்ளது. ஆகவே இலங்கையர்கள் எவரும்  அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதேபோல் குறுகிய கால விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில் தற்போது சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது வரையில்  25 க்கும் அதிகமான இலங்கையர்கள் அவ்வாறு வரவழைக்கப்பட்டு தனிமைப்படுதல் முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சிலர் விரைவில் வரவழைக்கப்படுவார்கள். எவ்வாறு இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். 

No comments

Powered by Blogger.