Header Ads



ஜுன் 20ம் திகதி நடத்தப்படுமா என்பதில் நிச்சயமற்ற தன்மை, அடுத்தவாரம் மற்றுமொரு பேச்சு


பிற்போடப்பட்டுள்ள பொதுத்தேர்தல், எதிர்வரும் ஜுன்மாதம் 20ம் திகதி நடத்தப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

நிச்சயமாக ஜுன் மாதம் 20ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? என்பது தொடர்பாக கலந்துரையாடி உறுதிப்பட கட்சிகளுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று -21-நடைபெற்றிருந்தது.

தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அதன் பொதுசெயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுமரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து செயதியாளர்களிடம் கருத்து தெரிவித்த தயாசிறி ஜெயசேகர, ஜுன் 20ம் திகதி தேர்தல் நடத்துவதில் நிச்சயமில்லாத தன்மையை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரது கருத்தின் ஊடாக அறிய முடிந்ததாக கூறினார்.

27ம் திகதி முதல் 30ம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி அது குறித்து அறிவிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தங்களிடம் கூறியதாகவம் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இவ்வாறான கருத்தையே வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தேர்தலை நடத்தக்கூடிய சரியான தினத்தை தீர்மானித்து அறிவிக்குமாறு கோரியதாக குறிப்பிட்டார்.

இதேநேரம், வேட்பாளர்களின் வேட்பு இலக்கங்கள் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி அளவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்ற நிலையில், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்த உறுதியான முடிவை அறிவிக்குமாறு தாம் கோரியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments

Powered by Blogger.