Header Ads



எனது மகளின் புகைப்படத்தை அணைத்து இன்று உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றேன்’’ - தாயார் ஆஷா தேவி

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை இன்று (மார்ச் 20) காலை 5:30 மணி அளவில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நிர்பயாவின் தாயாரான ஆஷா தேவி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

முன்னதாக தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு நேற்று (வியாழக்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லி திகார் சிறைக்கு முன்னர் குழுமியிருந்த பெண்கள் உரிமைகள் ஆர்வலரான யோகிதா பாயானா உள்ளிட்டவர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகு இது குறித்து பேசிய நிர்பயாவின் தாயார், ''கடைசியாக அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இன்றுதான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறினார்.

''நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்தவுடன், எனது மகளின் புகைப்படத்தை அணைத்து இன்று உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றேன்'' என்று ஆஷாதேவி நினைவுகூர்ந்தார்.

''எங்கள் மகள் உயிருடன் இல்லை. அவர் திரும்பி வரவும் மாட்டார். இந்த போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது அவள் எங்களை விட்டுச்சென்றார். இந்த போராட்டம் அவளுக்காக நடத்தப்பட்டது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறிய நிலையில், நிர்பயாவின் தந்தையான பத்ரிநாத் சிங் கூறுகையில், ''இன்று எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு ஊடகங்கள், சமூகம் மற்றும் டெல்லி போலீஸ் ஆகியோர் தான் காரணம். எனது புன்னகையை வைத்து என் இதயத்தில் தற்போது எப்படிப்பட்ட உணர்வுள்ளது என்று உங்களால் புரிந்துகொள்ள முடியாது'' என்று கூறினார்.

இது குறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மலிவால் கூறுகையில் ''இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. அவரது ஆன்மாவுக்கு இன்று அமைதி கிடைத்திருக்கும். நீங்கள் இந்த குற்றத்தை செய்தால் தூக்கு தண்டனைதான் வழங்கப்படும் என்று ஒரு கடுமையான செய்தியை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு இந்த நாடு அளித்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவரான ரேகா ஷர்மா கருத்து தெரிவிக்கையில், ''நீதி நிலைநாட்டப்பட்டதற்கு இன்றைய நாள் ஓர் உதாரணம். ஆனால் இதனை முன்னதாகவே செய்திருக்கலாம். தண்டனை நிறைவேறுவதை சற்று தள்ளிபோட செய்திருக்கலாம். ஆனால் தப்பிக்க முடியாது, தண்டிக்கப்படுவோம் என்று தவறு செய்பவர்களுக்கு  தற்போது புரிந்திருக்கும்'' என்றார். 

1 comment:

  1. குஜராத்தில் இந்து பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்று கணக்கான முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்காத இந்திய ஒரு இழிவான கீழ்த்தரமான நாடு. ஒரு நாள் இந்தியா துண்டு துண்டாக சிதறி போகும். அன்று தான் இலங்கையும் நிம்மதியடையும்

    ReplyDelete

Powered by Blogger.