Header Ads



மகாதீர் மொஹம்மத் தம்மைத்தாமே, தனிமைப்படுத்திக் கொண்டார்


மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்துப் பேசியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

95 வயதான மகாதீரை, அண்மையில் பண்டார் குச்சிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான டாக்டர் கெல்வின் ஈ லீ வுயென் சந்தித்துப் பேசினார். அப்போது மகாதீருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் மார்ச் 17ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட டாக்டர் கெல்வின், தமக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக குறிப்பிட்டிருந்தார். தமக்கு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து நோய்த் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டாக்டர் கெல்வினை சந்தித்ததை அடுத்து தம்மை தனிமைப் படுத்திக் கொண்டதாக மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

தனிமைப் படுத்திக் கொண்டது தொடர்பான தமது அனுபவங்களை அவர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

"தனிமைப் படுத்திக் கொள்ளும்போது முக்கியமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவதன் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இயலும். அதனால் தான் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நான் வெளியில் செல்லவோ பொது மக்களைச் சந்திக்கவோ கூடாது. நான் மற்றவர்களுடனும், பிறர் என்னுடனும் கைகுலுக்க இயலாது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கு கடுமையானதாக இல்லை," என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.