Header Ads



கல்முனை எல்லைக்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட தீர்மானம்

- M M. JESMIN - பாறுக் ஷிஹான் -

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று(28) கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்,மொத்த வியாபார நிலையங்கள்,கடைகள் அனைத்தும் மூடுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்கள் அனைத்தும் நடமாடும் விற்பனை முகவர்கள் ஊடாக விநியோகம் செய்யப்படுவதனால் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் தொடர்ந்தும் கடைகளை மூடுவதற்கு இக்கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இக்கூட்டத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு சுமார் 20ற்கு உட்பட்ட நபர்கள் கலந்து கொண்டால் போதுமானது என்றும் ,திருமணம் நடத்துவதை தற்காலிகமாக இக்காலகட்டத்தில் இடை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நடமாடும் வியாபாரங்கள் மேற்கொள்ளுவதற்கு பிரதேச செயலாளர், சுகாதார திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ்,இரானுவம்  ஆகியோரின் அனுமதியினை ஒன்றாக இணைந்து உத்தியோகபூர்வமாக பெற்று இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தல்களை மீறி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டால் அவ் வர்த்தக நிலையங்களுக்குரிய வியாபார அனுமதி பத்திரத்தினை இரத்து செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரத்திற்கு உட்பட பிரதேச செயலாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.