Header Ads



அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள், முஸ்லிம்கள் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடவுங்கள்

( ஐ. ஏ. காதிர் கான் )

    கொரோனா தொற்று தாய் நாட்டிலும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், இத்தொற்று நாட்டிலிருந்து விரைவில் நீங்க பிரார்த்தனை புரியுமாறும், இதேவேளை மக்கள் அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றி அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன், முஸ்லிம் இளைஞர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடந்துகொள்ளுமாறும், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நாட்டு மக்கள் அனைவரிடமும் விசேட ஊடக அறிக்கையின் மூலம் அன்பு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   ஜம் இய்யத்துல் உலமா, சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் ஏனைய முஸ்லிம், முஸ்லிமல்லாத சமூக நல அமைப்புக்கள் வழங்கியுள்ள அறிவுரைகளையும் முற்று முழுதாகப் பின்பற்றி, நாட்டையும் நாட்டு மக்களையும்  பேராபத்திலிருந்து மீட்க முன்வருமாறும் அந்த அறிக்கையில் அவர் சகலரையும் பணிவோடு கேட்டுள்ளார்.
   அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
    மக்கள் வீட்டில் தனித்திருப்பது மிக மிக அவசியம். இதுதான் மிக அவசியமான காலகட்டம்.
மார்ச் 23 லிருந்து ஏப்ரல் 3 வரை இந்தக் கிருமித் தாக்குதல் உச்சத்திலிருப்பதால், நோயுற்றவர்கள் மூலம் மற்றவர்களுக்கு அதிகம் பரவலாம். நாம் மிக மிகக் கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால், அடுத்த இரண்டு வாரங்களில் நோய் பரவல் கட்டுப்படுத்தப் பட்டு, அதற்கடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தாக்கம் குறையும். 
   நாம் அதிக பட்ச நோய் தொற்றின் காலத்தில் இருக்கிறோம்.  யார் வீட்டுக்கும் போகாதீர்கள். யாரையும்  அணுகாதீர்கள். தனிமையாக இருங்கள்.
இந்த அறிவுறுத்தலை அப்படியே விடாமல், உங்கள் நட்புகளுக்கும் தெரிவியுங்கள். இதனால், நீங்களும் அடுத்தவர்களும் பெரும் நன்மை அடைவீர்கள்.
    இது ஒரு பாரிய  தொற்று நோய். இது தொற்றிக் கொண்டால், ஒருவரோடு முடிவதில்லை. அவருக்குத் தெரியாமலேயே அவருடைய குடும்பத்தினர்கள், அவருடைய நண்பர்கள், அவருடைய அண்டை வீட்டுக்காரர்கள், அவரோடு பயணம் செய்பவர்கள் என எல்லோருக்குமே தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.  உலக நாடுகளில்  கொரோனா பலி எண்ணிக்கை தொகை  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமது நாட்டின் பெயரும் இதனால்  முதலில் வந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுவிடக் கூடாது. 
   "இதனால் நமக்கு என்ன...?" என்று இருக்காமல், வரும் முன் காப்பதே நம் அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக அமையும்.
   இதற்கு என்ன செய்ய வேண்டும். வீட்டில் இருந்தாலே போதும் என்று, அரசாங்கமும் மருத்துவக் குழுக்களும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றது.
   ஒருவருக்கு நோய்த் தாக்கம் இருந்தால், உடனே அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு தகவல் வழங்க  வேண்டும். இதன் அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாகத் தெரிந்தால், அவர் தனியறையில் தனிமைப் படுத்தப்படல் வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் ஒரு துணியால் முகத்தை மூடி மறைக்க வேண்டும். அல்லது முகக் கவசம் அணிந்து கொள்ள  வேண்டும். 
   அரசாங்கம் இந்தத் தொற்று நோய் பரவாமல் இருக்க,  ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்களை வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும் என  வலியுறுத்திக் கேட்டுள்ளது.
   ஆனால், பலர் இதனை ஏதோ பருவகால விடுமுறை என எண்ணிக் கொண்டு விளையாட்டாக வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றார்கள். குறிப்பாக, நமது முஸ்லிம் இளைஞர்களே இது தொடர்பில் அலட்சியமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அத்துடன், முஸ்லிம்களில் 70  வீதமானவர்கள் இவ்வாறான தவறுகளைச் செய்து வருவதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கவலை அடைந்தேன்.    இது மாபெரும் தவறு. இது நமக்கான எச்சரிக்கை  என்பதை நாம் உணராமலேயே இருக்கின்றோம். இதனுடைய பாரதூரம்  தெரியாமலேயே நாம் இவ்வாறு பொடுபோக்குத் தனமாக நடந்து கொள்கின்றோம்.
  படிக்காதவர்கள், அறியாதவர்கள்தான் வீதியில் வருகிறார்கள் என்றால் இதனை நன்கு அறிந்தவர்களும் கூட இதனைப் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக கூடி நிற்கிறார்கள்.
   மக்களே கொஞ்சம் அவதானம் எடுத்து  கவனத்தில் கொள்ளுங்கள்.    வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்,  அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என மிகப் பெரிய குழுவொன்று,  இத்தொற்று நோயை நமது தாய் நாட்டிலிருந்து முற்று முழுதாக அகற்றுவதற்கு, பல்வேறுபட்ட பிரயத்தனங்களை பல்வேறு வழிகளிலும் எடுத்து வருவதுடன், உங்கள் நலன் கருதி தன்னலமற்ற சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இது தவிர, ஜம் இய்யத்துல் உலமா, வக்பு சபை மற்றும் இதர முஸ்லிம் சமூக நல அமைப்புக்களின் உறுப்பினர்கள்  கூட எமக்கு இது தொடர்பில் அடிக்கடி சிறந்த வழிகாட்டல்கள் ஊடாக  தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தருணத்தில், நாம் அவர்களுக்கான கெளரவத்தையும் கண்ணியத்தையும் அவசியம்   வழங்க வேண்டும்.    கொரோனா தொற்று தொடர்பில் எமது சமூகம் பாராமுகமாக இருப்பது எனக்கு கவலை தருகிறது. 
   இது மிக மோசமான  தொற்று நோய் என்பதை இன்னும் சிலபேர் மறந்த நிலையிலேயே உள்ளனர். எனவே, அரசாங்கம் மற்றும் குறித்த அமைப்புக்களின் வழி காட்டல்களை, சரியாகவும் நேர்த்தியாகவும் பின்பற்றுவோம்.     ஊரடங்கு உத்தரவை மதித்து, இருப்பதைக் கொண்டு சமைத்து உண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு மீண்டும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.    எப்பொழுதும் அவதானமாக இருந்து, உங்களால் முடிந்தளவிலான பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். மற்றவர்களிடமிருந்து விலகி, நீங்கள் உங்கள் வீட்டில் தற்பொழுது இருப்பீர்கள் என நான்  நம்புகின்றேன். வீட்டுக்குள் இருக்குமாறு, மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். தனிமையாக இருந்து,  கொரோனா எனும் தொற்று நோயை அடியோடு அழித்து, நமது தாய் நாட்டைக் காப்போம்.
   இந்தக் கொடிய கொரோனாவை கதவை மூடி விரட்டுவோம். . சுத்தமான முறையில் சுகாதாரமான முறையில் இருந்து இதனை அடியோடு அழிப்போம். பல முறை கைகளைக் கழுவி கொரோனாவை வெல்லுவோம்.
   இந்தப் பேரழிவில் இருந்து நம்மை நாம் காத்து, நமது தாய் நாட்டு மக்களையும் உலக மக்களையும் காப்போம். என்றும் மகிழ்ச்சியாக வளமாக நலமாக வாழ்வோம். 
   இதற்காக, எல்லாம் வல்ல இறைவனிடம் நமது சமூகம், சகல சமூக மக்களுக்காக வேண்டியும் ஒவ்வொரு நாளும் காலை மாலை என எல்லா நேரங்களிலும் பிரார்த்தனை புரிவோம்.
    முஸ்லிம்கள் நாட்டுச் சட்டத்தை மதித்து அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவது, இஸ்லாத்துக்குக் கட்டப்படுவதற்கு சமமாகும் என்பதையும், நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    அத்துடன், இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில், அனைவரும் அரசியல், கட்சி, இன, மத, மொழி பேதம் பாராமல் ஒன்றுபடுமாறும்  அறைகூவல் விடுக்கின்றேன். 
   இதேவேளை, கவலை, கஷ்டம்,  கண்ணீரோடு  வாழும் மக்களுக்கு, வசதி படைத்த செல்வந்தர்கள் இத்தருணத்தில் தாராளமாக உதவ முன்வர வேண்டும் என்றும் தயைகூர்ந்து கேட்டுக்கொள்கின்றேன்.

4 comments:

  1. பாயிஸ் நாநா உங்களுக்கு யார் சொன்னது முஸ்லிம்களில் 70 வீதமானவர்கள் இந்த குற்றத்தை செய்தார்கள் என்று முஸ்லிம்களைப் பற்றி முன்பின் தேடிப்பார்க்காமல் எப்படி நீங்க இதை வெளியிடுவீங்க.கொடூர இனவாதிகளின் வாய்க்கு நீங்கள் அவலா போடுறீங்க .

    ReplyDelete
  2. Musthafa sir.ada detana taking recism in the media.pls tey to stop them recim recism activities

    ReplyDelete
  3. மன்னித்துவிடுங்கள்.பிழைதிருத்தம் பாயிஸ் அல்ல பைஸர் முஸ்தபா

    ReplyDelete
  4. First, get your facts double-checked. Being ignorant and having little knowledge is dangerous. This kind of media briefing only helps the racist media outlets to continue their dirty work.

    ReplyDelete

Powered by Blogger.