Header Ads



ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது

எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில்  இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் சில பிரதேசங்களில் நேற்று (30) தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. விசேடமாக இவ் ஊரடங்குச் சட்டம் தொற்றுநோயைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். குறித்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், ஆனாலும் தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படுவதில்லை, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்கள் பயணித்த வாகனம் பொலிஸ் கையகப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும். 

அதுபோலவே, அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான தேவைகளைத் தவிர எந்தவொரு காரணத்திற்கும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. 

அத்தியாவசிய விடயங்களுக்காக அனுமதிப்பத்திரம் வழங்கவதாயின் பிராந்திய சுகாதார மருத்துவர் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் எந்தவொரு காரணத்திற்கும் நீங்கள் வசிக்கும் பிரதேசத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. மிக முக்கிய காரணமாக இருந்தால் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை அவசியமாகும். அத்தியாவசிய சேவைகளாக சுகாதாரப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் கருதப்படுவர். 

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காகப் பொலிஸ் நிலையங்களால் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

முக்கியமாக சில சம்பவங்களும் முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. அத்தியாவசிய சேவைகளுக்கும் ஏனைய சேவைகளுக்கும் வழங்கும் அனுமதிப்பத்திரங்களை துஷ்பிரயோகம் செய்வதாக அறிய முடிந்தது. 

அத்தியாவசிய சேவை வழங்கும் பணியாளர்களைப் போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் மீண்டும் திரும்புகையில் வேறு நபர்களை ஏற்றி வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போதும் மீண்டும் திரும்புகையிலும் இவ்வாறு வேறு நபர்களை ஏற்றிச் செல்வதை தடுப்பதற்காகவும் அவ்வாறானவர்களைக் கைது செய்யவும் குறித்த வாகனத்தை பொலிசாரால் கையகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மூலமாகத்தான் இத்தொற்றுப் பரவுவதைத் தொடர்ந்து கூறி வருகின்றோம். ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாம் அவ்வாறானவர்களைத் தனிமை காக்குமாறும் தம்மைப் பதிவு செய்யுமாறும் கூறியிருந்தோம். 

ஆனாலும் இன்னும் சிலர் தனிமைப்படுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்படாதவர்கள் இருக்கின்னறனர். எந்நாட்டிலிருந்தும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையம் மூடும் வரை இலங்கைக்குள் பிரவேசித்தவர்கள் தம்மை ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் தம்மைப் பதிவு செய்து கொள்ளவும். தவறும் பட்சத்தில் அவர்களுடைய பெயர்ப்பட்டியல் குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளரிடம் பெறப்பட்டு முகவரிகளை ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இணையத்தளங்கள் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இலங்கையில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அவை பொய்யானதாகும். ஆனாலும் அட்டலுகம மற்றும் அக்குறணை பிரதேசங்களைத் தவிர வேறெந்தொரு பிரதேசமும் அவ்வாறு தனிமைப்படுத்தப்படவில்லை. 

No comments

Powered by Blogger.