Header Ads



சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பில் உலா வரும் வதந்திகள்: உண்மை என்ன..?


கொரோனா வந்தாலும் வந்தது, சுவிட்சர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதைக் குறித்து ஒரே வதந்திகள்தான்... ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

முதல் வதந்தி, கொரோனா நோயாளிகளால் சுவிஸ் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அறைகளுக்கு வெளியே படுக்கைகள் போட்டு நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த வார இறுதியில், சுவிட்சர்லாந்திலுள்ள பலருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வந்தது.

அதை அனுப்பியது ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர்கள் என்று கூறியது அந்த செய்தி.

அதன்படி, ஜெனீவா, லாசேன் மற்றும் பிற மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது உண்மையில்லை என்று கூறும் சுவிஸ் தீவிர சிகிச்சைப்பிரிவு கூட்டமைப்பின் தலைவரான Thierry Fumeaux, இப்போதைக்கு மருத்துவமனைகள் நிரம்பி வழியவில்லை என்றார்.

சொல்லப்போனால், படுக்கைகளின் எண்ணிக்கையில் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ள அவர், ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றார்.

ஆகவே, பயிற்சி பெறுவோர் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை மருத்துவ ஊழியர்களை உதவிக்கு அழைக்க வேண்டியிருக்கலாம் என்றார் அவர்.

இன்றைய சூழ்நிலையை 1 முதல் 10 வரை கணக்கிட்டால், நாம் 2இல்தான் இருக்கிறோம் என்கிறார் Jérôme Pugin என்னும் மருத்துவர்.

அடுத்த வதந்தி, சுடு தண்ணீரை அதிக அளவில் குடித்தால், கொரோனா பரவுவதை தவிர்க்கலாம்.

சமூக ஊடக செய்திகள், மக்களை முடிந்தவரை சூடாக இருக்கும் அனைத்து பானங்களையும் குடிக்கச் சொல்கின்றன.

அப்படிச் செய்தால், சூட்டில் கொரோனா வைரஸ் அழிந்து போகும் என்கின்றன அந்த செய்திகள்.

ஆனால், வெப்பமோ குளிரோ, எத்தகைய பருவநிலையிலும் கொரோனா பரவலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அதேபோல், பச்சை இஞ்சி, பச்சை பூண்டு, மிளகு போன்றவற்றை ஆகியவற்றை உண்ணவும் அந்த செய்திகள் மக்களை வலியுறுத்துகின்றன.

ஆனால், HUGஇன் தொற்று நோய் பிரிவு தலைமை மருத்துவரான Didier Pittet, சில உணவுகள் உடல் நலத்துக்கு நலம் விளைவிப்பவைதான், ஆனால், எதுவும் குறிப்பாக கொரோனாவுக்கெதிராக போராடாது என்கிறார்.

அடுத்த வதந்தி, சில மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது நிச்சயம் உண்மைதான்...

ஏராளமானோர், காய்ச்சலைக் குறைப்பதற்காக ibuprofenபோன்ற, ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரணிகள் மற்றும் வீக்கத்தை குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவை நுரையீரல் தொற்றை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.

அதற்கு பதிலாக, paracetamol (Dafalgan, Tylenol) எடுத்துக்கொள்வது, பாதுகாப்பான முறையில் காய்ச்சலை குறைக்க உதவும் என்கிறார்கள் சுவிஸ் சுகாதார அதிகாரிகள்.

No comments

Powered by Blogger.