March 22, 2020

பாரதூரத்தை இன்னும், கணக்கிலெடுக்காத இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வுலகத்தை பேரழிவுக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சுமார் உலகின் 175 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் வேகமாக பரவியுள்ளது . இன்றைய திகதி வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணித்தும் உள்ளனர். குறிப்பாக சீனா, இத்தாலி ,ஈரான், ஸ்பைன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகப்பெரும் வீரியம் கொண்டுள்ளது. தினந்தோறும் பிணக் காடாய் இந்நாடுகள் காட்சியளிக்கின்றன. நாளாந்தம் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க முடியாமல் எரித்து வருகின்றனர். உறவினர்களிடம் கூட சடலங்கள் கையளிக்கப் படாமல் கூட்டாக எரிக்கப்படுகின்றன. தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பாதிப்புக்குள்ளாகி வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பராமரிக்கவும் போதிய வசதியின்றி வைத்தியசாலைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. உறவினர்களால் கூட தம் சொந்தங்களை பார்க்கவோ, கவனிக்கவோ முடியாது, இறந்ததும் அவர்களது சடலங்களைக் கூட கையேற்று அடக்கம் செய்ய முடியாத அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைப் பாதுகாக்க தம்முயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் வைத்தியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட இதற்குப் பலியாகி வருவது மிகுந்த வேதனையைத் தருகின்றது. இதே வேளை நாடுகளின் பொருளாதாரமும் பெரு வீழ்ச்சி கண்டு, போக்கு வரத்துக்கள் துண்டிக்கப்பட்டு நாடுகளும் நகரங்களும் தனிமைப்பட்டு மனித குலம் நிம்மதி இழந்து வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இவ்வைரசின் பரவல் வேகம் முதல் 97 நாட்களில் ஓர் இலட்சம் பேரும் அடுத்த 13 நாட்களில் மேலும் ஓர் இலட்சம் பேரும் அடுத்த 3 நாட்களில் மேலும் ஓர் இலட்சம் பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இதன் கொடூரத்தைக் காட்டுகிறது. இவ்வாறானதொரு மனிதப் பேரவலம் உலகத்தையே பிணக் காடாய் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வைரசின் பயங்கர தாக்கம் உணரப்பட்டு அதனை கட்டுப்படுத்துவதற்கான பல முயற்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இலங்கை அரசும் இதன் பரவலை கட்டுப்படுத்த துரித முயற்சியில் இறங்கியுள்ளது. இலங்கையில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் புள்ளி விபரம் நாளுக்கு நாள் இவ்வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதை தெளிவாகக் காட்டுகின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் இதன் ஆபத்திலிருந்து இலங்கை மக்களை எவ்வாறு காப்பாற்றுவது ? என்ற கவலை தற்போது எல்லா மட்டங்களிலும் ஆட்கொண்டு இருக்கின்றது .

விடயம் இவ்வாறு இருக்க இந்த நாட்டு மக்களில் பலர் இன்னும் இந்த வைரஸின் பாரதூரத்தையும் பயங்கரத்தையும் பாதிப்பையும் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை அல்லது உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதனை அவர்களது செயற்பாடுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரப் பிரிவினர், மற்றும் அரச அதிகாரிகள் இதன் தாக்கத்தை நாட்டில் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் மக்கள் பெரியதொரு ஒத்துழைப்பினை வழங்காத நிலை காணப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது.
இத்தொற்றுநோயின் வீரியத்தை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் கடந்த இரண்டு வார காலங்களுக்கு முன்பிருந்தே இலங்கை அரசு களத்தில் இறங்கிவிட்டது. பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் ,அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை வழங்கி அனைவரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்களை வழங்கிவருகின்றது. ஆயினும் பெரும்பாலானவர்கள் இவ்விடுமுறையை உல்லாசமாக எடுத்துக்கொண்டு தேவையற்ற சந்திப்புகள், பயணங்கள், ஒன்று கூடல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
தமக்கு கிடைத்த அரிய விடுமுறை காலமாகவும் இதைப் பயன்படுத்தினர் .
இவ்வைரசின் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வணக்கஸ்தலங்களின் ஒன்று கூடல்கள் மற்றும் அரசியல் கூட்டங்களை கூட்டுதல் என்பவற்றைக் கூட தடை செய்து பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் அரசு பிற்போட்டது .ஆயினும் மக்கள் இவற்றையெல்லாம் பெரிதாக உள்வாங்கிக் கொள்ளாமல் தமது நாளாந்த செயற்பாடுகளில் எதுவித சலனமுமற்ற நிலையில் ஈடுபட்டுவந்தனர் . நிலமை மேலும் தீவிரமடைந்த போது ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து மக்களின் நடமாட்டத்தையும் வெளிச் செல்கையையும் கட்டுப்படுத்தியது. ஆயினும் அதற்குக் கூட கட்டுப்படாமல் வீதிகளில் திரிந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமையானது இன்னும் கொரோனா வைரசின் பாரதூரத்தை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது .

இலங்கைத் திருநாடு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நாடு ,வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவ வசதிகள் குறைந்த நாடு. இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் ஏனைய நாடுகளைப் போல விரிவாக்கம் அடையின் அதனை நிச்சயம் இந்த நாடு ஈடு கொள்ளாது. பொருளாதாரரீதியாக பெரும் வளர்ச்சி கண்ட மருத்துவ வசதியில் பெரும் பலம் கொண்ட இத்தாலி நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் பராமரிப்பையும் வழங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் எம்போன்ற பின்தங்கிய நாடுகள் எவ்வாறு இவ்வாறான அவசர நிலைகளை சமாளிக்க முடியும் என்பதனை நாம் புரிந்து செயற்படவேண்டும். சாதாரணமாக இலங்கையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் தேசிய ரீதியில் 500 பேருக்கு மட்டுமே உள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தி வருகிறது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வைத்தியசாலைகளின் தரத்திற்கேற்ப அவைகள் பங்கிடப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரில் நூற்றுக்கு ஐந்து பேர் இத்தகைய தீவிர அவசர சிகிச்சையின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள் எனும்போது ஏனைய நாடுகளைப் போன்று இந்நாட்டில்
இத்தொற்று நோயின் பரவலாக்கம் வீரியம் கொண்டால் நமது நிலை என்னவாகும்? என்பதை அனைவரும் சிந்தித்து உணர்ந்து செயற்பட வேண்டும் .

கொரோனா வைரஸின் தாக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்தவும் உயிர் பலிகளை தவிர்க்கவும் சுகாதாரத் திணைக்களம், வைத்திய அதிகாரிகள் சுகாதாரப் பணியாளர்கள் ,அரச அதிகாரிகள் ,பாதுகாப்பு தரப்பினர் இரவு பகலாக தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊண், உறக்கம் இன்றி எமக்காக பணியாற்றி வருகின்றனர் .இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் மேற்கொள்ளும் தன்னலம் கருதாத பணிகள் மனநிறைவோடு நன்றி கூரத் தக்கவைகள். அவர்களுக்கு கூட சரியான தகவல்களை வழங்காமல் சில தொற்று நோயாளிகள் அவர்களையும் நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கி இருப்பதானது மிகவும் கவலை அளிக்கின்ற விடயமாகும். இதுகூட எமது மக்களின் சுயநலத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்த நாட்டில் சில பிரதேசங்களில் வாழ்பவர்கள் வேற்றுக் கிரகத்தில் வாழுகின்ற எண்ணத்தில் இருக்கிறார்களோ? தெரியவில்லை அவர்கள் இந்த வைரஸின் பயங்கரத்தையெல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அரசியல் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த அவசர கால நிலையில் தற்பாதுகாப்பு பெறுவதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மக்களுக்கு வழங்குவதை கைவிட்டு சமூக வலைத்தளங்களில் அரசியல் யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமது கட்சி வேட்பாளரை போற்றியும் எதிர்க் கட்சி வேட்பாளரை தூற்றியும் இரவு பகலாக இவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொண்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது .இந்த வேற்றுக்கிரகவாசிகள் சற்று இந்த பூமிக்கு வருகை தந்து உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த மனித அவலத்திலிருந்து அவர்களை மீட்க, பாதுகாக்க ,சிந்திக்க, பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி வீதிகளிலே மோட்டார் சைக்கிள்களில் மிக வேகமாக உலாவிக் கொண்டிருக்கும் சமூக பொறுப்பற்ற இளைஞர்கள் தற்கால சமூக அவசர நிலையை புரிந்து கொள்ள வேண்டும் .இவர்கள் தனது ஊருக்குள்ளும் வீட்டுக்குள்ளும் கொரோனாவின் கொடூரத்தால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் பின்னர்தான் தெளிவு பெறுவார்களோ என்னவோ தெரியவில்லை .

எனவே , இலங்கை மக்களாகிய நாங்கள் இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்தையும் பயங்கரத்தையும் புரிந்து அது பரவாமல் தடுக்க அரசினது அறிவித்தல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாக செயற்பட்டு நம்மையும் நம் வீட்டையும் தேசத்தையும் இதன் தீங்கிலிருந்து பாதுகாக்க முயற்சி எடுப்போம். கொரோனா வைரஸ் விவகாரம் எம்மில் சிலர் நினைப்பது போன்று சாதரணமானதோ அலட்சியம் செய்யத்தக்கதோ அல்ல. அதன் பாதிப்பு மிகவும் பயங்கரமானது. ஆபத்தானது. அரசின் சட்டங்களாலும் அறிவுரைகளாலும் மட்டும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. நமது தியாகங்களும் ஒத்துழைப்பும் இதற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை புரிந்து செயற்படுவோமாக.

- ஏ.எல்.பீர் முஹம்மது காஸிமி - எம்.ஏ 

0 கருத்துரைகள்:

Post a comment