March 28, 2020

கொரோனா கற்றுத்தரும் 1000 பாடங்கள், கட்டுநாயக்கவில் கண்ட காட்சிகள்

(நீர்கொழும்பு நிருபர் - எம்.இஸட்.ஷாஜஹான்)
  
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து அமுலாக்கப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் வாடகை வீடுகளில் முடங்கியிருந்த ஊழியர்களில் ஒரு பகுதியினர் நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை தமது ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள்  அங்கு வருகை தந்திருந்தனர். சில  பெண்கள் தமது குழந்தைகளுடனும் பிள்ளைகளுடனும் நீண்ட வரிசையில் கடுமையான  வெய்யிலில்  பல மணித்தியாலங்கள் காத்து நின்றதை பார்க்கும்போது பரிதாபகரமாக இருந்தது.

 அங்கிருந்த பலர் கைகளில் போதியளவு  பணம்   இன்றி இருந்தனர். பலருக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கவில்லை. பலர் காலை உணவை கூட உண்ணாமல் காலை 5 மணிக்கே அங்கு வருகை தந்திருந்தனர்.  இன்னும் பலர்  வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமலும், கைகளில் பணமின்றியும், ஊரடங்கு சட்டத்தினால் வாங்க முடியாத சூழ்நிலையிலும் வெறுங்கையுடன் வீடு நோக்கிச் செல்வதற்கு காத்திருந்தனர். அவர்களின் முகங்களில் வீடு செல்லும் மகிழ்ச்சியும், பொருளாதார காரணங்களின் காரணமாக சோகமும்  தெரிந்தது.

இதற்கிடையில் யுவதி ஒருவர் துணியினலான பையொன்றில் தான் செல்லமாக வளர்க்கும் நாயை வைத்திருப்பதை எனது கெமரா கண்கள் கண்டு வியந்தன. மேலும் சிலரும் அதனை படம்பிடித்தனர். செல்லப்பிராணியை விட்டுச் செல்வதற்கு மனம் இன்றி அதனையும்  வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக அவர் அங்கு தயாராக இருந்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் வாடகை வீடுகளில் முடங்கியிருக்கம் ஊழியர்கள் தொடர்பான விடயத்தை 25-3-2020 அன்று இரவு 7 மணி  சிரஸ தொலைக்காட்சி செய்தியில் (News 1ST)  ஒளிபரப்பினோம். இதுவே முதலாவது வெளியிடப்பட்ட  செய்தியாகும்;.  இந்த செய்தியை நான் சேகரித்திருந்தேன். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து  தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை   அந்த செய்தியில் தெரிவித்தனர்.

அடுத்த நாள் (26-3-2020) இந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள செய்;தி  அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. 27 ஆம் திகதி காலை தமது ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக ஊழியர்கள்; சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வருகை தந்தபோது காலையிலேயே நானும் அங்கு சென்;றுவிட்டேன்.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த போதும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் முன்பாகவும், சுதந்திர வர்த்தக வலய வாயிலின் முன்பாகவும்  திரண்டிருந்த யுவதிகளையும் இளைஞர்களையும் (பத்தாயிரம் பேர் வரை என தெரிவிக்;கப்பட்டது) பார்த்தபோது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஊடகத்தின் சக்தி அது. இன்னும் சிலரும் இதற்காக முயற்சி செய்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகான சபை உறுப்பினரும் தொழிற் சங்கத் தலைவருமான மஹிந்த ஜயசிங்கவும் அதில் ஒருவர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் நலனுக்காக உழைக்கும்  'தாபிது' அமைப்பைச் சேர்ந்த  சமிளா துசாரி மற்றொருவர். இவர் மூலமாகவே  தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினை எனக்குத் தெரிய வந்தது. பின்னர் ஊடகங்கள் வாயிலாக  அது வெளிப்படுத்தப்பட்டது.

இங்கு வருகை தந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் தொழில் செய்யாத,  பிற இடங்களில்  தொழில் செய்யும் ஊழியர்களாவர்  என அங்கு அதிகாரிகளால்; தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கும் மத்தியில் பல ஆயிரக்கணக்கானோர் அங்கு ஒன்று கூடியிருந்தமை நிச்சயமாக பாதுகாப்பானதல்ல. இதை அங்கிருந்த ஒவ்வொருவரும் அறிவர்.

எது எப்படி இருந்தபோதிலும் இந்த ஊழியர்களை ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் அதிகாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதை அவதானிக்க முடிந்தது. எதிர்பாராத எண்ணிக்கை கொண்ட ஊழியர்கள் அங்கு வருகை தந்திருந்தனர். ஏற்பாடுகளிலும் குறைகள் காணப்பட்டன. தொடர்பாடலிலும் குறைகள் காணப்பட்டதாக  தெரிய வருகிறது.

ஊழியர்கள்  நான்கு நீண்ட வரிசையில்  நிறுத்தி வைக்கப்பட்டு மருத்துவ  சோதனை மேற்கொள்ளப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளபட்டது. பின்னர்  விசேட   பஸ்களில் ஏற்றி அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அனைவரும் கைக் கோர்ப்போம்.

1 கருத்துரைகள்:

firt of all all china begs expel from this country

Post a comment