Header Ads



புறா சின்னத்தில் போட்டி - SLMC, ACMC கட்சிகளுக்கும் அழைப்பு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேசிய ஐக்கிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் புறா சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதுடன் மூன்று மாவட்டங்களுக்கான வேட்புமனு பூர்த்தியாகியுள்ளதாக முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்துக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் கொந்தராத்தையே ரணில் அணியினர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மேற்கொண்டு செல்கின்றனர்.

அதனால் சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று -25- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி நாடு பூராகவும் புறா சின்னத்தில் போட்டியிட தீர்மானித்திருக்கின்றது. கேகாலை உட்பட 3 மாவட்டகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம். கிறிஸ்தவ இனங்களைச்சேரந்தவர்கள் எமது கட்சியில் போட்டியிட இருக்கின்றனர்.

அத்துடன் எமது கட்சி ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி தனக்குள் இருக்கும் பிரச்சினையை இன்னும் தீர்த்துக்கொள்ள தவறி இருக்கின்றது. சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் முடிவில்லாமல் இருக்கின்றது.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை இழுத்துக்கொண்டு செல்வதே ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களின் திட்டமாகும்.

அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்தும் மக்கள் எதிர்பார்த்த எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. அதனால் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் பொதுத் தேர்தலில் கிடைக்கும் என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.

எனவேதான் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தொடர்ந்து இழுத்துக்கொண்டு செல்லும் கொந்தராத்தை ரணில் விக்ரமசிங்க அணியினர் மேற்கொண்டு, தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க செயற்பட்டு வருகின்றனர்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு தற்போதைக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் பொதுத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். எதிருவரும் வாரங்களில் இதுதொடர்பாக அவர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Last election you fail even 500 votes from your own town.
    Here new challenge, this time at least 100 votes Mr. Saly.

    ReplyDelete

Powered by Blogger.