Header Ads



பொலிஸ் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின், இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (28) பிற்பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கில் மிக விமரிசையாக இடம்பெற்றது. 

83வது தடவையாக இடம்பெற்ற இவ்விளையாட்டுப்போட்டி தடகள மற்றும் மைதான போட்டிகளை கொண்டமைந்திருந்தது. மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் 60 பொலிஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றினர்.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஆகியோரால் ஜனாதிபதி அவர்கள் வரவேற்கப்பட்டதுடன், 30 குழுக்களைக் கொண்ட பொலிஸாரினால் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. 

மரியாதை அணிவகுப்பில் சிறந்த பேண்ட் வாத்திய குழுவுக்கான விருது ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது. 

அனைத்துப் போட்டிகளிலும் திறமைகளை வெளிகாட்டிய பொலிஸ் களப்படை தலைமையகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதோடு இரண்டாம் இடத்தை பிரதமர் பாதுகாப்பு படையினர் பெற்றுக்கொண்டனர். 

பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிற்கு ஜனாதிபதி அவர்களினால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது. 

பொலிஸ் கலாசார பிரிவு மற்றும் பொலிஸ் பேண்ட் வாத்திய பிரிவு ஒன்றாக இணைந்து நடத்திய கண்காட்சி இந்நிகழ்வை வண்ணமயமாக்கியது. 

நாட்டில் இடம்பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முதன்மை பெறுகின்றது. இலங்கை பொலிஸ் இதன் மூலம் புதிய திறமையான வீர, வீராங்கனைகளை இனங்கண்டுள்ளது. திறமையை வெளிக்காட்டும் வீர, வீராங்கனைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. 

அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.02.28

No comments

Powered by Blogger.