Header Ads



அக்குறணை வீதிகளுக்கு தனிநபர்களின், பெயர் சூட்டும் விவகாரம்

அக்குறணை பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள, வீதிகளுக்கு, தனி நபர்களின் பெயர்களைச் சூட்டுவதற்கான பிரேரணைகளைச் சபையில் முன்வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், சபையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  

மேற்படி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், இன்று (11) நடைபெற்றது. இதன்போது, அக்குறணை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கே.எம்.நிலாம், அக்குறணை பங்கொல்லாமட பிரதேசத்திலுள்ள பாதை ஒன்றை உருவாக்குவதற்கு, அப்துல் மஜீட் என்பவர் பாரிய பங்காற்றியுள்ளார் என்றும் எனவே, அவரது பெயரை இந்தப் பாதைக்கு வைக்க வேண்டும் என்றும், பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.  

அந்தப் பிரேரணைக்கு, சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

பாதைகளை உருவாக்குவதற்கு, பிரமுகர்கள் உதவி செய்துள்ளனர் என்றும் இவ்வாறு அவர்களது பெயர்களைப் பாதைகளுக்குச் சூட்டினால், அனைத்துப் பாதைகளுக்கும் ஒவ்வொருவரது பெயரைச் சூட்ட வேண்டிவரும் என்றும் தெரிவித்தனர்.  

இதற்குப் பதிலளித்த சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், அக்குறணை பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளுக்கு, தனி நபர்களது பெயர்களைச் சூட்டுவது தொடர்பான பிரேரணைகளைச் சபையில் முன்வைப்பதை இதன் பின்னர் தவிர்த்துக்கொள்ளுமாறு, உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.  

அத்துடன், இப்பிரேரணை தொடர்பாக எதிர்ப்பும் இருப்பதால், பிரேரணையை முன்வைத்த உறுப்பினர், அதனை வாபஸ் பெறவேண்டும் என்றும் இல்லையென்றால் வாக்கெடுப்பதற்கு விடவேண்டும் என்றும் தெரிவித்தார்.  

இதனையடுத்து, பிரேரணையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கே.எம்.நிலாம், தனது பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.  

No comments

Powered by Blogger.