Header Ads



டெல்லி வன்முறைக்கு சமூக விரோதிகளும், அரசியல் சக்திகளும், வெளியில் இருந்து வந்தவர்களுமே காரணம்


இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வன்முறையில் 23 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த வன்முறைக்கு, சமூக விரோதிகளும், அரசியல் சக்திகளும், வெளியில் இருந்து வந்தவர்களுமே காரணம், சாமானிய மக்கள் காரணமில்லை என்று கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தில் பலியான தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் இன்று (புதன்கிழமை) சட்டமன்றத்தில் அவர் அறிவித்துள்ளார்.

இந்துக்களோ, முஸ்லிம்களோ பயன் அடையவில்லை

இந்த கலவரத்தால் இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ லாபம் அடையவில்லை என்று குறிப்பிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், அனைவரும் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்துக்களும், முஸ்லிம்களும் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், "இதுவரை நிகழ்ந்த சம்பவங்கள் போதும். நவீன டெல்லியை உடல்களின் குவியல்கள் மீது கட்ட முடியாது. வெறுப்பு அரசியலுக்காக வீடுகளை கொளுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் அவர்.

அரசியல் சக்திகளும் வெளியில் இருந்து வந்தவர்களுமே வன்முறைக்கு காரணம் என்று கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்படவேண்டும், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

1 comment:

  1. வெறும் அறிக்கைகள் விட்டு பிரயோசனமில்லை. முதல்வர் என்ற வகையில் கல வர க் கார ர் களுக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை முதலில் செய்து காட்டுங்கள்.பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நஸ்ட ஈட்டை வழங்குங்கள்.
    உங்கள் பதவிக்கு ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தால் பதவி துரங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.