February 17, 2020

சாய்ந்தமருது நகரசபையை காரணம்காட்டி, தப்பிக்க முயன்ற ரணில்

இன்று சாய்ந்தமருது நகரசபை என்ற உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் மக்கள் இந்த நிகழ்வை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு, இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இம்மக்களது சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமடைகிறேன்.
இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். எமது ஆட்சியின் போது, நுவரெலிய மாவட்டத்தின், நுவரேலிய-மஸ்கெலிய தொகுதியின், அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகளை, பிரித்து ஒவ்வொன்றிலும் தலா, மும்மூன்று பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி மன்றங்களை அமைத்து, மொத்தம் ஆறு புதிய பிரதேச சபைகளை நாம் உருவாக்கி தந்தோம்.
இன்றுள்ள, நோர்வூட், மஸ்கெலிய, அம்பகமுவை, கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரேலிய பிரதேச சபைகள் இவ்விதமாக நாம் அமைத்தவைதாம்.
ஏற்கனவே இருந்த அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகளின், ஒவ்வொரு பிரதேசத்திலும், சுமார் 125 ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு சுமார் 100 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
உண்மையில் இலங்கையில் மிக, மிக பெரிதாக இருந்து, வேறு எந்த ஒரு சபையையும் விட கட்டாயமாக முன்னுரிமை கொடுத்து பிரித்து வெவ்வேறு சபைகளாக அமைக்கப்பட வேண்டிய சபைகளாக, அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகள்தான் இருந்தன.
ஆனால், 1987ம் ஆண்டு முதல், சுமார் 30 ஆண்டுகளாக செயற்பட்ட இந்த சபைகளை பிரித்து புதிய சபைகளை அமைக்க எவராலும் முடியவில்லை. எவருக்கும் செய்து முடிக்கும் அக்கறை இருக்கவில்லை. ஆளுமை இருக்கவில்லை. முப்பது வருடத்தில் மாறி மாறி வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் பங்காளிகளாக இருந்த கட்சியினருக்கு இதுபற்றிய உத்வேகம் இருக்கவில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் இதை எப்படி செய்து முடித்தோம்?
இதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்க தட்டில் வைத்து எமக்கு தரவில்லை. இது தொடர்பில் பலமுறை அமைச்சரவையில் பேசி, குரல் எழுப்பி, பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்து, இதை பேசுபொருள் ஆக்கிய பின் கடைசியாக ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில், புதிய உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் அமைச்சர்களின் கூட்டம் நிகழ்ந்தது. இதற்கு நான் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகவே போனேன்.
அதற்குள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த “புதிய நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகளை தரமுடியாது” என்ற நிலைப்பாட்டை பேசி முடித்து வைத்திருந்தார். அவரது பிரச்சினை அவருக்கு.....சாய்ந்தமருது நகரசபையை பெற்று தருவேன் என, அந்த ஊருக்கு சென்று வாக்குறுதி அளித்த காரணத்தால், நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகளை இப்போது தந்தால், அந்த சாய்ந்தமருது பிரச்சினை மேலெழும். எனவே அதை காரணம் காட்டி இதை தராமல் இருக்க அவர் தந்திரமாக முயன்றார்.
நான் கூட்டத்துக்கு தாமதமாக சென்று அமர்ந்த போது, எனக்கு முன் அங்கு சென்று இருந்த அமைச்சர் திகாம்பரம், பிரதமர் ரணிலின் இந்த நிலைப்பாட்டை என்னிடம் வந்து இரகசியமாக சொன்னார். “சரி, அப்படியா, பார்ப்போம்” என நான் சற்று அமைதியாக இருந்து விட்டு, சாந்தமாக சிங்களத்தில் பேச ஆரம்பித்தேன்.
“ஜனாதிபதி அவர்களே, இலங்கையில், எந்த ஒரு புது பிரதேச சபை அமைக்க முன், நுவரேலியா மாவட்டத்தில், இந்த புதிய பிரதேச சபைகளை அமைத்தே ஆக வேண்டும். இந்நாட்டின் வேறு மாவட்டங்களில், பதினையாயிரம் பேருக்கு கூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியாவில் ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை என இரண்டு பிரதேச சபைகள் இருப்பது பெரும் அநீதி. எப்போதோ இது நடந்து இருக்க வேண்டும். நடக்க வில்லை. இத்தனை நாள் இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள். நாம் அப்படி இருக்க முடியாது. இதை உடன் முடித்து தாருங்கள்” என்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால பதில் அளிக்கும் முன், மேஜையின் மறுபுறம் எனக்கு முன் அமர்ந்து இருந்த பிரதமர் ரணில் இடை மறித்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
அவர் என் முகத்தை பார்க்காமல் பேசினாலும் என்னை விளித்துதான் பேசுகிறார் என எனக்கு தெரியும். ஏனெனில், என்னிடம் பிரதமர் ரணில் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்.
“கிழக்கு மாகாணத்தில், கல்முனையில், சாய்ந்தமருதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். இப்போது இதை தந்தால், அங்கே பிரச்சினை வரும். ஆகவே எல்லாவற்றையும் எதிர்காலத்தில் ஒன்றாக செய்வோம்” என்றார்.
எனக்கு இப்போது கோபம் வந்தது. ஆங்கிலத்திலும், அதை மொழி மாற்றி சிங்களத்திலும் சத்தமாக “கத்த” ஆரம்பித்தேன்.
“சாய்ந்தமருது மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தால், அதை உடன் நிறைவேற்றுங்கள். ஏன் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அதன் காரணம் உங்களுக்கு இரண்டு மனது. சாய்ந்தமருது நகரசபை “வேண்டும்” என்பவர்களையும், “வேண்டாம்” என்பவர்களையும் நீங்கள் திருப்திபடுத்த பார்க்கிறீர்கள்” என்றேன்.
அப்போது அங்கு இருந்த எனது நண்பர் அப்போதைய நமது அரசிலும், இப்போதைய அரசிலும் அமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்த, இடைமறித்து, “அமைச்சர் மனோவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு ஒன்று என இரண்டு பிரதேச சபைகள் நுவரெலியாவில் இருப்பது எனக்கு மனோ சொல்லும்வரை தெரியாது. அது அநீதி. அதை நிச்சயம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
அவரையும் இடைமறித்து பிரதமர் ரணில் ஏதோ சொல்ல முயல, அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை.
“ஜனாதிபதி அவர்களே, பிரதமர் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற சொல்லுங்கள். ஆனால், அதை காட்டி இதற்கு தடை போடுவதை ஏற்க முடியாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. உண்மையில் அதைவிட, இதுதான் மிக அவசர பிரச்சினை. ஏனெனில் இங்கே ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு என இருக்கும் இரண்டு பிரதேச சபைகளை பற்றிதான் நான் பேசுகிறேன். இவற்றை உடன் பிரித்து நியாயத்தை வழங்குங்கள்” என்றேன்.
மீண்டும் பிரதமர் ரணில் ஏதோ சொல்ல முயல, எனக்கு, இத்தகைய சந்தர்ப்பங்களில் வரும், அந்த கடும் கோபம் வந்தது.
“அப்படியானால், உங்களுக்கு முடிந்ததை நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் முடிந்ததை நான் வெளியில் போய் செய்கிறேன்” என்று சத்தமாக சிங்களத்தில் கத்தி விட்டு, நான் அமர்ந்து இருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்து விட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினேன்.
ஜனாதிபதி ஏதோ சொல்லி என்னை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், நான் அதை கவனத்தில் எடுக்கும் மனநிலையில் இருக்கவில்லை.
வாசல் கதவுக்கு சென்று திரும்பி பார்த்து, என்னுடன் வெளியேற ஆரம்பித்த அமைச்சர் திகாம்பரத்தை, என்னுடன் வெளியே வர வேண்டாம். அங்கேயே இருந்து பேசுங்கள் என சைகை காட்டி விட்டு வந்து விட்டேன்.
நான் சண்டையிட்டு வெளியேறிய பின் அந்த பிரச்சினையின் அடிப்படை அந்த அறையில் மாறி விட்டது. அதுதான் எனக்கு வேண்டும். பின் நமது கூட்டணியின் பிரதி தலைவர் அமைச்சர் திகாம்பரம், நான் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்து பேசியுள்ளார்.
அதையடுத்து எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நோர்வூட், மஸ்கெலிய, அம்பகமுவை, கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரேலிய என்ற புதிய ஆறு பிரதேச சபைகளை அமைக்கும் அறிவிப்பை அரசாங்கம் சில வாரங்களில் வெளியிட்டது.
இதில் சோகம் என்னவென்றால், இன்று ஒரேயொரு உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டதை ஆரவாரமாக அனுபவித்து, சாய்ந்த மருதூர் முஸ்லிம் சகோதர மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், ஆறு புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைத்து கொடுத்தும்கூட அதை இந்தளவு ஆரவாரமாக அனுபவித்து நுவரேலியா மாவட்ட மலையக தமிழ் மக்கள் கொண்டாடவில்லை.
வடக்கு கிழக்கில், தமிழ் மக்களுக்கு எப்படி மாகாண சபைகள் அதிகார பகிர்வை குறைந்த பட்சமாக கொண்டு வருகின்றனவோ, அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வை பிரதேச சபைகளே கொண்டு வருகின்றன. இந்த அரசியல் வெற்றி, பாமர மலையக மக்களுக்கு இன்னமும் புரியவில்லை.
பதினைந்து இலட்சம் மலையக தமிழ் மக்களின் ஒரே பிரச்சினை, "ஐம்பது ரூபாய்" என்ற ஒன்றைரை இலட்சம் தொழிலாளரின் தொழிற்சங்க பிரச்சினைதான் எனக்காட்டி, இந்த அரசியல் பயண மைல்கல்லைகூட, அதற்குள் முடக்க நினைப்போருக்கும், இது புரிந்தும் புரியவில்லை.
ஒருசில புத்தி ஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரிந்தாலும், அரசியல் காழ்ப்பு காரணமாக அதை கொண்டாட அவர்களுக்கு மனசில்லை.
ஆனால், என்றாவது ஒருநாள் -அன்று நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- இதை வரலாறு கொண்டாடும்! பதிவு செய்யும்!! இன்றைய குழந்தைகள் வளர்ந்து அறிவுடன் ஆளாகும் போது இதை அறிந்து கொண்டாடுவார்கள்!!!

Mano Ganesan MP


2 கருத்துரைகள்:

Waste Hakeem உம் சாய்ந்தமருதுக்கு பொல்லு போட்டிருப்பாரே.

Waste fellow

Kalangaatha kuttayil meen pidikkum nafar ivar...!!!

Post a comment