Header Ads



கொரோனா தொற்றுடன் பிறந்த, குழந்தை தானாகவே குணமடைந்தது


 சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதன்முதலில் வைரஸ் பரவிய ஹுபெய் மாகாணத்திலும் நோய்த்தொற்று குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, உடனடியாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தினர்.

ஆனால், மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை. வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தானாகவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளது.

குழந்தை சியோசியோவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவவில்லை. ஆகையால், நாங்கள் குழந்தைக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் எதையும் வழங்கவில்லை. குழந்தையின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது. அதற்கான சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனா புதிய வைரஸ் என்பதால் அது எப்படி பிறந்த குழந்தைகளுக்கு பரவுகிறது என்பது பற்றி தெரியவில்லை. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும் போது நாம் கவனமாக செயற்பட வேண்டும்

என மருத்துவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.