Header Ads



ஆளுநர் முஸம்மிலை பாதுகாப்பது குருநாகல் முஸ்லிம்களின் கடமை, அதுல விஜேசிங்க

ஆளுநர் முஸம்மிலை பாதுகாப்பது குருநாகல் முஸ்லிம்களின் கடமை என முன்னாள் வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதுன்கஹகொடுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க  இதனைத் தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
வடமேல் மாகாணம் 90 வீதம் பௌத்த மக்கள் வாழும் ஒரு பிரதேசமாகும், விசேடமாக குருநாகல் மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் பௌத்த ஆவார்.  முதல்முறையாக முஸ்லிம் ஒருவர் எமது மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஆளுநர் முஸம்மில் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை அளவிட வேற எந்த விதமான அளவுகோலும் தேவையில்லை.

இந்தப் பரிசு  விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஆளுநர் முஸம்மிலை பாதுகாக்க வேண்டிய கடமை குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு உள்ளது.

முஸம்மில் அவர்களுக்கு ஆளுநர் பதவியில் 5 வருட காலம் நிம்மதியாக இருக்க முடியும், என்றாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவர் இதுவரை காலமும்  பாராளுமன்றத்துக்குத்  தெரிவாகவில்லை.  இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு தற்பொழுது குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ளது.

உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உங்களில் ஒருவரே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். நான் எப்போதும் இனவாதத்திற்குத் துணைபோனவன் அல்ல. ஆகவே எனது வாக்கில் ஒன்றை முஸம்மிலுக்கு வழங்குவேன் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், நீங்களும் அதற்குத் தயாராகுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர். 

No comments

Powered by Blogger.