Header Ads



துருக்கி விமானம் இரண்டாக உடைந்து 120 பயணிகள் காயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, இரண்டாக உடைந்து தீப்பிழம்பாக மாறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 120 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உயிர் அபாயம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மோசமான காலநிலை காரணமாகவே பெகாசஸ் விமான சேவை நிறுவனத்தின் குறித்த பயணிகள் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியதாக தெரியவந்துள்ளது.

மேலும், எரிபொருள் பகுதியில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விமானம் இரண்டாக உடைந்த பகுதியில் இருந்து பயணிகளை மீட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

துருக்கி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 177 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களைக் கொண்ட இந்த விமானம் இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான பயணிகள் விமானத்தை விட்டு தாமாகவே வெளியேற முடிந்தது என்றும்,

எஞ்சிய பயணிகள் அவசரகால ஊழியர்களால் மீட்கப்பட்டதாகவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகளை அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.

டசின் கணக்கான அவசரகால பணியாளர்கள் விமானத்திலிருந்து பயணிகளை வெளியே அழைத்துச் சென்று ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு சென்று கொண்டிருந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், இரண்டு விமானிகளும் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகளால் இன்னும் அவர்களுடன் பேச முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.