Header Ads



விஜேதாஸவின் பிரேரணைக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

சிறுபான்மையினரின் குரல்வளையை நசுக்கும் நோக்கில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலத்திற்கான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பிரேரணையை தோற்கடித்து, முறியடிப்பதற்கான அத்தனை முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வில் மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் இது தொடர்பான பிரேரணையை கொண்டு வந்தார். மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய ஹென்றி மகேந்திரன் தெரிவித்ததாவது;

"குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் சிறுபான்மைச் சமூகத்தினர் இன்று தமக்குள் வசைபாடிக் கொண்டு, முட்டி மோதிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய பிரேரணையொன்றை பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அவர் சமர்ப்பித்திருக்கின்ற 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மை சமூகத்தினரின் அரசியல் பலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதனை நம்மவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

நாட்டை நிர்வகிப்பதற்காக காலத்திற்கு காலம் டொனமூர். சோல்பரி போன்ற அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பில் சிறுபான்மையினருக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதை அறிந்து, இரு துருவங்களாக செயற்பட்டு வந்த அமரர் தந்தை செல்வநாயகம், அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோர் சமூக நலன்கருதி, அதனை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்து, மலையகத் தலைவர் அமரர் தொண்டமானையும் சேர்த்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அதுவே பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்தது. பிற்காலத்தில் இக்கூட்டணியின் மூலம்தான் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், அரசியல் அரிச்சுவடியை கற்றுக் கொண்டு, முஸ்லிம்களுக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கினார்.

1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன இரண்டாவது குடியரசு யாப்பை உருவாக்கியபோது விகிதாசார பிரதிநிதித்துவ முறையை ஏற்படுத்தி, சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மிகவும் சூட்சுமமாக 12.5 வீத வெட்டுப்புள்ளியை உட்புகுத்தினார். பின்னர் 1988 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாரான ரணசிங்க பிரேமதாச, மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆதரவைக் கோரியபோது இவ்வெட்டுப்புள்ளியை 05 வீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அஷ்ரப் மிகவும் தீர்க்கதரிசனமாக முன்வைத்தார். அதனை பிரேமதாச நிறைவேற்றிக் கொடுத்ததனாலேயே இன்றுவரை சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்று வருகின்றன என்பதை மறந்து விட முடியாது.

இந்த அடிப்படையில் கிடைக்கின்ற சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்து, அவர்களது ஆதரவின்றி சர்வாதிகார ஆட்சியொன்றை நிறுவும் தந்திரோபாயத்துடனேயே விஜேதாச ராஜபக்ஷ வெட்டுப்புள்ளியை அதிகரிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

சிறுபான்மையினரின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய, இப்பிரேரணையை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரை வஞ்சிக்கக்கூடிய இத்திட்டத்தை எமது கல்முனை மாநகர சபையும் வன்மையாகக் கண்டித்து எதிர்ப்பதுடன் இதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.

இதனை வழிமொழிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் உரையாற்றினார். இவ்விடயம் தொடர்பிலான மாநகர சபையின் தீர்மானத்தை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், சபையின் செயலாளரைப் பணித்தார்.(அஸ்லம் எஸ்.மௌலானா)

No comments

Powered by Blogger.