Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றியம்

(நா.தனுஜா)

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும், சமூகவலைத்தளங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் பதிவாகியதுடன், 3 இணைய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மிகநீண்ட நேரம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையானது ஊடக சுதந்திரம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்தோடு ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் மீளாய்வு செய்யப்பட்டு, அதன் குழப்பகரமான உள்ளடக்கங்கள் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். அனைத்து வேட்பாளர்களுக்கும் சமனான தேர்தல் களமொன்றை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய விதமாக சட்டங்கள் இயற்றப்படுவதுடன், சமூகவலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவை உள்ளடங்கலாக 23 விதப்புரைகளையும் தமது அறிக்கையில் உள்ளடக்கியிருக்கிறது.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்கான கோட்பாடுகள் பிரகடனத்திற்கு இசைவான முறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்புவிடுத்திருந்தது.

அதன்படி இலங்கைக்கு வருகைதந்த 60 குறுகிய மற்றும் நீண்டகால கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழு  297 வாக்களிப்பு நிலையங்களுக்கும், 25 இற்கும் அதிகமான வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் விஜயம் செய்திருந்தது. அதன்படி அவதானிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அக்குழு தமது பூர்வாங்க அறிக்கையை நவம்பர் 18 ஆம் திகதி சமர்ப்பித்தது.

அதன்பின்னர் டிசம்பர் நடுப்பகுதி வரை அந்தக்குழு இலங்கையில் தங்கியிருந்து தேர்தலுக்குப் பின்னரான காலகட்டத்தில் தெரிவிக்கப்படக்கூடிய முறைப்பாடுகளையும், வேண்டுகோள்களையும் அவதானித்தது.

அந்தச் செயன்முறைகளுக்குப் பின்னர் சுமார் இருமாதங்கள் கழித்து மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான தேர்தல் கண்காணிப்பாளர் மரிஸா மத்தியாஸ், தேர்தல் செயன்முறைகளில் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாடு தொடர்பான 23 விதப்புரைகளுடன் கண்காணிப்புக் குழுவின் இறுதி அறிக்கையை இன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்வைத்து வெளியிட்டுவைத்தார்.

1 comment:

  1. மிகச் சிறந்து முன்னெடுப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எமது மனப்பூர்வமான பாராட்டுகள். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த அரசாங்கமோ அல்லது வேறொரு அரசாங்கங்களோ இத்தகைய ஆலோசானைகளையும், முன்னேற்றமான கருத்துக்களையும் உள்வாங்குவதில்லை. அதுமட்டுமன்றி உள்வாங்குவதாக பாசாங்கு செய்து அவற்றை அப்படியே சுருட்டி எறியும் கைங்கரியங்களைத் தான் எல்லா அரசாங்கங்களும் செய்து வந்துள்ளது. அது எங்கள் மூன்றாம் உலகின் மிகச்சிறந்த முன்மாதிரி.

    ReplyDelete

Powered by Blogger.