Header Ads



இலங்கையர்களில் 30 லட்சம் பேர் மதுபானம் அருந்தி, 24 லட்சம் பேர் புகை பிடிக்கின்றனர்


இலங்கை மக்கள் தொகையில் 24 லட்சத்து 6 ஆயிரத்து 581 பேர் புகைப்பழக்கத்தை கொண்டுள்ளதாகவும், 30 லட்சத்து 35 ஆயிரத்து 143 பேர் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அபாயகரமான ஔடதங்களை கட்டுப்படுத்தும் தேசிய சபையின் ஆய்வு அதிகாரி ஏ.டி. தர்ஷன தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மூன்று லட்சத்து ஓராயிரத்து 898 பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். 92 ஆயிரத்து 540 பேர் ஹெரோயின் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

24 ஆயிரத்து 211 பேர் போதை மாத்திரைக்கு அடிமையாகியுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 234 பேர் வேறு விஷ போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

மக்கள் தொகையில் 16 லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் புகைத்தல், 10 லட்சத்து 63 ஆயிரத்து 383 பேர் மது, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 643 பேர் கஞ்சா, 70 ஆயிரத்து 862 பேர் ஹெரோயின், 12 ஆயிரத்து 932 பேர் விஷ போதைப் பொருட்களை தினமும் பயன்படுத்தும் அளவுக்கு அடிமையாகியுள்ளனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான காலப் பகுதியில் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து கிராம உத்தியோகஸ்தர் பிரிவு மட்டத்தில் இந்த ஆய்வை நடத்தியது.

இலங்கையில் 18 வயதுக்கும் குறைந்த பெண்கள், சிறுவர்கள் மாத்திரமல்லாது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என இரண்டு தரப்பினரும் புகைத்தல் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் ஏ.டி. தர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. "நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்;   

    எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?"
    (அல்குர்ஆன் : 5:91)

    ReplyDelete

Powered by Blogger.