Header Ads



முஸ்லிம் சமூகத்தில் 20 பேர் தெரிவாவார்கள் - வடிவேல் சுரேஷ்

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்து கொள்ள, தான் பெரியவன், சிறியவன் என்ற தன்னகத்தை ஓரங்கட்டிவிட்டும், அரசியல் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அதே நேரத்தில் தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு மட்டுமின்றி நாட்டில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பில் அதனை நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பதை நாங்கள் உண்ணிப்பாக அவதானித்து வருகின்றோம்.

எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்பாக இந்த ஆயிரம் ரூபாவை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டாயமாக இந்த ஆயிரம் ரூபாய் தைப்பொங்கலுக்கு முன் கிடைத்தால் நல்லது என எதிர்பார்க்கின்றோம்.

வடிவேல் சுரேஷ் யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவில்லை. எனக்கு அவ்வாறான பேச்சுவார்த்தை தேவையும் இல்லை. இது ஒரு சுத்த பொய்யாகும்.

பதிய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தையும், அத்தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாகவும் ஆக்குவதற்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகம், மலையக மக்கள், தமிழ் மக்களே எனக்கு முக்கியம். அவர்களின் உரிமை தொடர்பில் எந்த மொழியிலும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்.

ஆனால் இரகசிய பேச்சுவார்த்தை எனக்கு தேவையில்லை. ரணில் விக்ரமசிங்க முதல் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்கள் எனது நண்பர்கள். எனது சமூகம் சார்ந்த மக்களின் வேலை திட்டங்களை முன்னெடுக்க நான் எப்போதும் தயாராகவே இருப்பேன்.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் ஐ,தே.கவுடனே எனது பயணம் சஜித் பிரேமதாசவுடனே இணைந்து தொடரும்.

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அரசியலை திணிக்க கூடாது. தொழிற்சங்கம், அரசியல் என்பது வேறு அதற்கு அப்பால் சென்று சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.

எமது சமூகம் சார்ந்த மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதேநேரத்தில் மலையகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் 25 பேர் இம்முறை நாடாளுமன்றத்தில் தெரிவாவார்கள்.

அதேபோல் முஸ்லிம் சமூகத்தில் 20 பேர் தெரிவாவார்கள். மலையகத்தில் 16 பேர் தெரிவாக வேண்டும். ஆனால் 9 பேரே காணப்படுகின்றனர்.

7 பேரை இழந்துவிட்டோம். அதனை மீட்டு எடுத்து அரசியல், தொழிற்சங்கம் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மலையக அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை)  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
    (அல்குர்ஆன் : 3:104)

    ReplyDelete

Powered by Blogger.