Header Ads



நுவரெலியாவுக்கு செல்ல, வேண்டாமென கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் அதிக மழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும், இந்த விடயம் குறித்து மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் தாம் எச்சரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களின் சிறிய மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

மேலும் மண்சரிவு அபாயம் காணப்படும் பல பிரேதசங்களை சார்ந்த 13 குடும்ப அங்கத்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் நுவரெலியா மாவட்டதிற்கு சுற்றுலா பயணம் வருவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மண்சரிவுகள் பதிவாகியுள்ள நிலையில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அப்பகுதியில் வாகனங்களை உபயோகிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறும், அனைத்து வாகனங்களின் மின் விளக்குகளை இயக்குமாறு தாம் அறிவுறுத்துவதாக மாவட்ட செயலாளர் ஆர். புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார் .

No comments

Powered by Blogger.