Header Ads



எதிரணியின் வாயை அடைத்து, பெரும்பான்மையை பெற ஆளுந்தரப்பு திட்டமிடுகிறதா - முஜுபுர் ரஹுமான்

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக எதிரணியினரின் வாயை அடைத்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஆளுந்தரப்பு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் ஏற்கனவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வெள்ளிக்கிழமை -20- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருமாதகாலம் மாத்திரமே கடந்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த போதிலும், பொதுத்தேர்தல் இன்னமும் முடிவடையவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் எதிரணி மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் ஓரங்கமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றிருக்கிறது.

சபாநாயகர் அலுவலகத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விடுக்கப்பட்ட அறிக்கையின்படி, பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறியே சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றிருக்கிறது என்பது உறுதியாகின்றது. சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாராளுமன்றச் சட்டங்களை மீறியே அத்தகைய நாட்டை உருவாக்குகின்றார்கள் போலும்.

எனவே இவையனைத்தும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்தின் அடிப்படையிலானவையே என்பது தெளிவாகின்றது என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.