December 13, 2019

ஏனைய நாடுகளிடம் நட்பையே எதிர்பார்க்கிறேன், ஆதிக்கம் செலுத்துவதை நிராகரிக்கிறேன் - கோட்டாபய


உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும் தேவை இலங்கைக்கு இல்லை எனவும் ஏனைய நாடுகளிடம் நட்பை எதிர்பார்க்கும் அதேவேளை, ஆதிக்கம் செலுத்துவதை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வௌிவிவகார அமைச்சரை இன்று முற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

வலய ஒத்துழைப்பு தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்திய ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) சுதந்திர, பகிரங்க இந்திய – பசுபிக் வலய எண்ணக்கரு குறித்து ஜப்பானுக்குள்ள அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக, ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு இந்து சமுத்திர வலயம் நெருக்கடிகளற்ற அமைதியான பிராந்தியமாகக் காணப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக தாம் முன்நிற்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கான அரசியல் செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சூழவுள்ள கடற்பிராந்தியம் இலங்கைக்கே உரித்தானது என்பதை மறந்து பல வருடங்களாக இந்து – பசுபிக் கடற்பிராந்தியம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றமை சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதன் பின்னர், சுதந்திரம் வழங்கப்பட்டதன் ஊடாக இந்த வலயம் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் புலனாகின்றது.

நாட்டிற்கேயுரிய பொருளாதார வலயமான, இலங்கையின் நிலப்பரப்பை விட 9 மடங்கு அதிகமான அந்தப் பகுதி இலங்கை கடற்பரப்பென அழைக்கப்பட வேண்டும்.

சர்வதேச சட்டத்திற்கமைய, இந்த கடற்பரப்பு இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ளது.

இதனை உலகின் பலம்வாய்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கும் மதிப்பளிப்பதற்குமான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது.

அத்துடன், ஹொங்காங்கில் நடைபெற்றதைப் போன்று ஒரு நாடு இரு தேசம் எனும் எண்ணக்கருவை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது.

1 கருத்துரைகள்:

இந்த தீவு கடலால் சூழ்ந்து கடலில் போதியளவுக்கு அதிகமான மீன்கள் காணப்படும்போது டின்மீனை இறக்குமதி செய்து வௌிவாடுகளுக்கு நாம் அடிமை. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பச்சை பசேலென்ற பசும் புல், நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் பசுமாடு வளர்க்கும் வாய்ப்பும் சூழலும் சிறப்பாக இருக்கும் போது நாம் அருந்துவது இறக்குமதி செய்யப்பட்ட பால்மா, சமயலறையில் உள்ள 98% மான உணவுசமைப்பதுடன் தொடர்பான உணவுப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் பயணிக்கும் 100% வாகனங்கள் வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை இயக்கும் பெற்றோல் 100% அரபு இஸ்லாமிய நாடுகளி்ல் இருந்து இறக்குமதி, நாட்டின் ஏற்றுமதி வருடாவருடம் மிக அதிகமாகக் குறைந்து வர, இறக்குமதி வீதம் பலமடங்காக அதிகரித்துச் செல்கின்றன, விவசாயம் செய்யும் விதைநெல் தவிர அத்தனையும் பசளையும், ஏனைய இரசாயனப் பொருட்களும் இறக்குமதி, இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் அரச, தனியார் பணிகளுக்குச் செல்லும் எங்கள் பெண்கள் நிலை அரைநிர்வாணம் தான். அல்லது அதைவிட மோசம். சமலறை கேஸ் ஒருநாளைக்கு வராவிட்டால் பட்டினி, உள்நாட்டு உற்பத்திகள் இல்லை, அவ்வாறு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் விலை திடீரென குறைவடைந்தால் அவர்களுக்கு எஞ்சியிருப்பது தற்கொலை மாத்திரம், இதற்கு அரசோ தனியார் நிறுவனங்களோ எந்த தீர்வும் இதுவரை வழங்கவில்லை. இவ்வளவும் இன்னும் எத்தனை எத்தனையோ நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வௌிநாட்டில் தங்கியிருக்கும் நாம் வௌிநாடுகளின் அழுத்தத்துக்கு அஞ்சமாட்டோம் என்றால் அதன் பொருள் என்ன என விசயமறிந்த இலங்கையர்களிடம் பணிவாக வேண்டி நிற்கின்றோம்.

Post a comment