Header Ads



இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு


இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

மற்றொருபுறம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை பல்வேறு கோணங்களில் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.

"கடலளவு போராட்டக்காரர்கள்"

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியாவில் நடந்த போராட்டங்களில் மக்கள் உயிரிழந்த சம்பவங்களே பெரும்பாலும் பாகிஸ்தானிய ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்தன.

பாகிஸ்தானை சேர்ந்த 'தி எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், மோதி தலைமையிலான அரசு ஒட்டுமொத்த இந்தியாவையும் காஷ்மீரை போன்று ஆக்குவதற்கு முயன்று வருவதாக கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு பாகிஸ்தானிய செய்தித்தாளான 'டெய்லி ஜங்', "இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கடலளவு மக்கள் திரண்டுள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் சொல்வதென்ன?

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டக்காரர்களுடன் இணைந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், மோதி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தித்தாளான, 'தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான இந்தியாவின் ஆளும் கட்சியின் பிற நடவடிக்கைகளை விட, குடியுரிமை திருத்த சட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டதாகவும், மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பிரபல செய்தித்தாளான 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

"2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரான நரேந்திர மோதி, தனது கட்சியின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றான இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை செய்து வருகிறார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்தேதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நான்கு தசாப்தத்திற்கும் மேலாக காணாத மிகப் பெரிய போராட்டத்தை இந்தியா சந்தித்து வருவதாக பிரிட்டனை சேர்ந்த பிரபல செய்தித்தாளான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள், மாணவர்கள், வயதானவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் போராடி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, வளைகுடா நாடுகள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.