Header Ads



ஞானசாரருக்கு பொதுமன்னிப்பளித்த மைத்திரி - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு முன்னாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களில் பிரதிவாகளாக பெயரிடப்பட்டவர்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பதால் மனுதாரர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீது 2016ஆம் ஆண்டில் விசாரணை இடம்பெற்றபோது ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நுழைத்து ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டு ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதோடு விசாரணையில் அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமை குற்றம் எனக் கண்டறிந்த நீதிமன்றம், அவருக்கு 06 வருடகால சிறைத்தண்டனையை விதித்தது.

இந்நிலையில், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி ஞானசார தேரருக்கு, அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பளித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு ஜனாதிபதி இவ்வாறு பொதுமன்னிப்பு அளித்தமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்டி சந்தியா எக்னலிகொட உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனுக்கள் நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, எல்.டீ.பி தெஹிதெனிய, மூர்த்து பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட குழு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டமா அதிபர், முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோராள, அந்த அமைச்சின் செயலாளர், கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் வெலிகடை சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளான பெயரிடப்பட்டிருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது, மனுக்களில் பிரதிவாதிகளான பெயரிடப்பட்டவர்களில் ஒருசில மாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான காலஅவகாசத்தை வழங்கும்படி மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மாற்றம் செய்யப்பட்ட மனுக்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தொடர்ந்து மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.