December 22, 2019

விடாமல் விஷம் கக்கும், சிங்கள இனவெறிப் பத்திரிகை

2019.12.22 ஆம் தேதி வெளியான அருண எனும் தீவிரச் சிங்கள இனவெறிச் சிந்தனை கொண்ட பத்திரிகை "சிங்கள பெளத்தர்களை இழிவுபடுத்தும் நூதனசாலைகள்" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொலெட் சேனாநாயக்க மற்றும் நாரத கருணாதிலக்க ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் காத்தான்குடியில் அமைந்துள்ள மரபுரிமைக் காட்சியம் குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

உலகளாவிய நூதனசாலைகள் குறித்துப் பொதுவாக எழுதிவிட்டு, கொழும்பில் அமைந்துள்ள தேசிய நூதனசாலை பற்றிக் குறிப்பிடும்போது ஓரிடத்திலாவது அந்த நூதனசாலையைத் தன் சொந்தக் காணியில் சொந்தச் செலவில் நிர்மாணித்துக் கொடுத்த வள்ளல் வாப்பிச்சி மரைக்காரின் பெயரைக்கூடக் குறிப்பிட்டுவிடாமல் மிகக் கவனமாக வரலாற்று இருட்டடிப்புச் செய்துள்ள கட்டுரையாளர்கள் காத்தான்குடி மரபுரிமைக் காட்சியகம் குறித்துமட்டும் அப்பட்டமான அவதூறுகளை அள்ளிவிட்டுள்ளனர். 
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகளை இங்கே மொழிபெயர்ப்புச் செய்து தருகிறோம். 

1) .... கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் உள்ள இஸ்லாமிய நூதனசாலை கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டதாகும். அரச இலச்சினையோடு கூடிய அதன் பெயர்ப்பலகையில் 'மரபுரிமைக் காட்சியகம்' (Heritage Museum) எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக 'அல்லாஹ் தவிர வேறு கடவுள்கள் இல்லை, மொஹமட் - அல்லாஹ்வின் தூதராவார்' எனும் பொருள் தரும் அரபு வசனங்கள் இரண்டு உள்ளன. (அரபு வசனங்களை - கலிமாவையும் - தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்) 

அந்தப் பெயரின் மூலமாகச் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், இக்காட்சியகத்தின் நோக்கம் உண்மையான வரலாற்றை மறைத்து /அழித்து, இந்நாட்டில் முஸ்லிம்களென்று தனியான ஓரினம் இருப்பதாகச் சித்தரித்து உறுதிப்படுத்திக் கொள்வதாகும். கிழக்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரே இம் மரபுரிமைக் காட்சியகத்தையும்  நிறுவுவதில் முன்னின்று உழைத்தார் என  இக்காட்சியகம் சம்பந்தமாக இணையத் தளத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பவே ஹிஸ்புல்லாஹ் கிழக்கு முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளார் எனும் நம்பிக்கை ஏராளமான மக்களிடத்தில்  உள்ளது. அதற்குச் சான்றாக சவூதியிலிருந்து கிடைத்துள்ள பாரிய நிதியுதவிகள் தொடர்பான சர்ச்சைகளும் உள்ளது. 

2)... ஹெரிட்டேஜ் மியூஸியம் இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றைப் பொய்யாகப் புனைந்துகாட்டும் ஓரிடமாகும். நாட்டின் பண்டைய வரலாற்றைப் பற்றி அதிகம் தெரியாதோர் அதைப் பார்வையிடும்போது பொலன்னறுவையை ஆட்சி செய்த மகா பராக்கிரமபாகு மன்னனும் ஓர் இஸ்லாமியராகவே இருந்துள்ளான் எனக் கருதிவிட இடமுண்டு. மியூஸியத்தில் பராக்கிரமபாகு மன்னனின் அரச சபையும் அங்கே முஸ்லிம் அமைச்சர்கள் காணப்படும் தோற்றங்களும் சிலைகளாக வடித்து வைக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் இந்நாட்டில் அத்துமீறிக் குடிபுகுந்து ஆக்கிரத்து வாழ்ந்து வரும் ஓர் இனத்தார் போன்று என்று அங்கு வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குத் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் வழிகாட்டிக (Guides)ளும் அங்கே உள்ளனர். அவர்களின் கதைகளைக் கேட்கும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிங்களவர்கள் பற்றிய அதிருப்தி உணர்வை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 
3)... படைப்பாளன் (கடவுள்) குறித்த நம்பிக்கை கொண்ட நாடுகளில் ஏற்படும் சிந்தனா ரீதியான பிரச்சினைக்குத் தேரவாத புத்த மதத்தை அழித்துவிடுவதையே ஒரு தீர்வாக நினைக்கின்றனர். தேரவாத புத்த மதத்தைப் பேணிக்காக்கும் ஒரு நாடாக இலங்கையே உள்ளது. இலங்கையில் தேரவாத பௌத்த சாஸனத்தைப் பேணிக் காப்போர் சிங்கள இனத்தார் மட்டுமே. தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் அதனைப் பேணிக் காப்பதற்காகவே கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் !

Mohamed Ajaaz

0 கருத்துரைகள்:

Post a Comment